தமிழகத்தில் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை- சசிகலா
திமுக ஆட்சிக்காலத்தில் சட்டம் ஒழுங்கு எந்த கடையில் கிடைக்கும் என்று கேட்கும் நிலைக்கு வந்துவிட்டது என சசிகலா குற்றஞ்சாட்டியுள்ளார்.
திமுக எம்.பி. திருச்சி சிவா இல்லம் தாக்கப்பட்டது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள சசிகலா, “தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான அரசு அமைந்து இரண்டு வருடங்கள் ஆகி விட்டது. இன்றைக்கு சட்டம் ஒழுங்கு என்றால் எந்த கடையில் கிடைக்கும் என்று கேட்கும் நிலைக்கு வந்துவிட்டது. பொதுமக்கள் பாதுகாப்பின்றி ஒவ்வொரு நாளும் தங்களுடைய உயிருக்கு பயந்து வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். அதனை நிரூபிக்கின்ற வகையில் அண்மையில் திருச்சியில் உள்ள திமுகவை சேர்ந்த அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினரும் சண்டை போட்டுகொண்டு இருப்பது இப்பொழுது வெட்ட வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
திருச்சி மாநகரில் அமைச்சர் பொறுப்பில் உள்ளவரும் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினரும் ஒருவருக்கொருவர் யார் பெரியவர் என்று போட்டிப்போட்டு கொண்டு தங்கள் கோஷ்டியினரை வைத்து பயங்கரமாக தாக்கி கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. ஒரு மாநிலங்களவை உறுப்பினரின் வீட்டையும், காரையும் அடித்து சேதப்படுத்தியுள்ளனர். இதனை நேரில் பார்த்த அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். மக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டிய பொறுப்பில் இருப்பவர்களே இவ்வாறு நடந்து கொள்வதை யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். மேலும், இவர்கள் மக்களுக்கு பாதுகாப்பு அளிப்பதாக பதவி பிரமாணம் எடுத்துக் கொள்வது எதற்காக என்று தெரியவில்லை? இதற்காகவா மக்கள் உங்களுக்கு வாக்களித்தனர்.
மேலும், இந்த சம்பவத்தில் காவல் நிலையத்திற்குள் புகுந்த திமுகவினர் தாக்குதல் நடத்தியதோடு, அங்கிருந்த பெண் தலைமை காவலரையும் தாக்கியுள்ளனர். இதன் காரணமாக பெண் காவலரின் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகவும் செய்திகள் வருகின்றன. எனவே, தமிழ்நாட்டில் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லாத ஒரு அவல நிலை தற்போது ஏற்பட்டு இருக்கிறது. புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஆட்சி காலத்தில் இது போன்று யாரும் நடந்தது இல்லை. நடக்க விட்டதும் கிடையாது. இன்றைக்கு ஆளுங்கட்சியினரின் அராஜக செயல்களை கட்டுப்படுத்தமுடியாமல் காவல்துறை திணறிவருகிறது. காவல்துறையை கையில் வைத்திருக்கும் தமிழக முதல்வரோ தனது சொந்த கட்சியினரையே கட்டுப்படுத்த முடியாமல் வேடிக்கை மட்டும் பார்த்துக்கொண்டு இருக்கிறார். இது போன்று இருந்தால் தமிழ்நாட்டு மக்களுக்கு எவ்வாறு பாதுகாப்பு கொடுப்பார்கள் என்று தெரியவில்லை?
திமுக தலைமை தன் சொந்த கட்சியினரை கட்டுப்படுத்த வேண்டும். இதுபோன்று சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு போனால் வெளிநாட்டினர் எவ்வாறு நம் மாநிலத்தில் தொழில் தொடங்க முன் வருவார்கள். இது மாநிலத்தின் வளர்ச்சிக்கும் முட்டுக்கட்டையாக அமைந்துவிடும்.
திமுகவினர் சண்டை போட்டு கொள்ள வேண்டும் என்றால் தனது கட்சி அலுவலகத்திலேயோ அல்லது அறிவாலயத்திற்குள்ளேயோ பொதுமக்கள் யாருக்கும் ஏதும் தொந்தரவு இல்லாமல் அவரவர் திறமையை காட்டிக்கொள்ளலாம். அதை விட்டுவிட்டு மக்கள் தங்கள் பிள்ளைகளோடு வாழும் பகுதிகளில் இது போன்று செயல்பட்டு அனைவரையும் அச்சுறுத்துவது மிகவும் கண்டிக்கத்தக்கது.
திமுகவினர் எப்பொழுதெல்லாம் ஆட்சிக்கு வருகிறார்களோ அப்போதெல்லாம் சட்டம் ஒழுங்கு சுத்தமாக இருக்காது. மேலும் திமுகவினர் பொதுமக்களை ஏமாற்றி ஏதோ விதிவசத்தால் ஆட்சியை பிடித்து அமர்ந்து கொண்டு மக்களை அன்றாடம் துன்புறுத்தி வருவது வேதனை அளிக்கிறது. இதெற்கெல்லாம் விடிவு காலம் விரைவில் வரப்போகிறது. புரட்சித்தலைவர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் தந்த அதே பொற்கால ஆட்சியை அமைத்து தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை சீராக்கி மக்களுக்கு பாதுகாப்பானவாழ்கையை ஏற்படுத்தி கொடுப்போம் என்பதை இந்நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்” என வலியுறுத்தியுள்ளார்.