அரசுப்பள்ளிகளில் நிறுவப்பட்டுள்ள ஸ்மார்ட் வகுப்பறைகளை பாடம் நடத்த மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனவும், சொந்த செயல்பாடுகளுக்கு பயன்படுத்தக் கூடாது எனவும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் தொடங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்மையில் அறிவித்திருந்தார். அதன்படி 6 மாவட்டங்களில் பொருளாதாரத்தில் பின்தங்கிய ஒன்றியங்களில் (EBB) உள்ள 493 பள்ளிகளில் 634 திறன்மிகு வகுப்பறைகள் நிறுவப்பட்டுள்ளன. இந்த வகுப்பறைகளை முறையாக பயன்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை செயலர் வெளியிட்டுள்ள அரசாணையில், “
- திறன்மிகு வகுப்பறையை கையாள பள்ளிக்கு ஒரு ஆசிரியரை சார்ந்த தலைமை ஆசிரியர் நியமிக்க வேண்டும். கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளுக்காக மட்டுமே திறன்மிகு வகுப்பறையை தினமும் பயன்படுத்த வேண்டும்.
- பொறுப்பாசிரியர் இல்லாமல் திறன்மிகு வகுப்பறையை மாணவர்கள் கையாளுவதை தவிர்த்தல் வேண்டும். ஆசிரியர்கள் தங்கள் வகுப்பு கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளுக்கு ஏற்றவாறு ஒன்று முதல் 5ம் வகுப்புக்குரிய மின்னிய பாடப் பொருள்களை திறன்மிகு வகுப்பறையை பயன்படுத்தி கற்பித்தலை திட்டமிட்டு கொள்ள வேண்டும்.
- திறன்மிகு வகுப்பறையை பயன்படுத்தும் ஒன்று முதல் 5ம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்கள் முதற்கட்டமாக திறன்மிகு வகுப்பறையை பயன்படுத்துவதற்கான கால அட்டவணை ஒன்றை தயாரித்தல் வேண்டும்.
- .மேலும் நாள் ஒன்றுக்கு ஒரு மணி நேரம் திறன்மிகு வகுப்பறையை பயன்படுத்துவதை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும்.
- மின்னிய பாடப்பொருட்கள் காணொலிகளாகவும் மற்றும் ஆசிரியர்களுக்கான மாணவர்களுக்கான காணொலிகளாகவும் தனித்தனியே இடம் பெற்றிருக்கும். மாணவர்களுக்கான காணொலிகள் ஒவ்வொரு கட்டகத்திற்கும் அந்தந்த நாள்களுக்கான செயல்பாடுகளுக்கு ஏற்றவாறு இடம் பெற்றிருக்கும்.
- 1 முதல் 5ம் வகுப்பிற்கான ஆசிரியர் கையேட்டில் (THB ) உள்ள செயல்பாடுகளை வகுப்பறையில் செயல்படுத்தும் பொழுது அச்செயல்பாட்டிற்கு தேவையான மாணவர் காணொலிகள் இருப்பின் அதனை பயன்படுத்தி மாணவர்களுக்கு அச்செயல்பாட்டை கற்பித்தல் வேண்டும்.
திறன்மிகு வகுப்பறையில் செய்யக்கூடாதவை
- பாதுகாப்பு காரணங்களுக்காக கம்ப்யூட்டரில் உள்ள USB Port கள் முடக்கப்பட்டு இருக்கும். பென் டிரைவ் (Pen drive) போன்ற எந்த தகவல் சேமிப்பான்களையும் எந்த Desktop சாதனங்களிலும் இணைத்தல் கூடாது.
- பணியாளர்கள் தங்கள் சொந்த செயல்பாடுகளுக்கு கம்ப்யூட்டர் மற்றும் இண்டர்நெட் ஆகியவற்றைப் பயன்படுத்துதல் கூடாது. அனைத்து அமைப்புகளின் செயல்பாடுகள் மற்றும் பதிவுகள் CCCயிலிருந்து 24 மணி நேரமும் மானிட்டரில் பதிவு செய்யப்படும். மாணவர்கள் பிரிண்டரை பயன்படுத்த அனுமதிக்க கூடாது.
- மின் கேபிள்கள், ஸ்பீக்கர் கேபிள்கள் மற்றும் ஹெட்போன்களை இழுக்கவோ, அகற்றவோ கூடாது.
- அனைத்து தகவல் தொடர்பு சாதனங்கள் மற்றும் நாற்காலி, மேசைகள் போன்ற பொருட்கள் சேதமடையக் கூடாது.
- மாணவர்களோ அல்லது ஆசிரியர்களோ எந்தவொரு உள்ளமைவையும் (configuartion) மாற்றவோ அல்லது சர்வரிலிருந்து எந்த OS உள்ளமைவு கோப்பினை நீக்கக் கூடாது.
- CCC- ன் அனுமதியின்றி வேறு எந்த ஒஎஸ் மற்றும் சாப்ட்வேர்யும் நிறுவ முயற்சிக்கக் கூடாது.
- தனிப்பட்ட ஹாட்ஸ்பாட், வைபை பயன்படுத்தக் கூடாது. ஆய்வகத்தின் பொறுப்பு ஆசிரியர் இல்லாத நிலையில் ஆய்வகங்களில் மாணவர்கள் தனியாக இருக்க அனுமதிக்கக் கூடாது.
- கூடுதல் புத்தகங்கள், சீருடைகள், பெஞ்சுகள், மேஜைகள், நாற்காலிகள், மிதிவண்டிகள் மற்றும் பயன்படுத்தப்படாத இதரப் பொருட்களை பத்திரப்படுத்தும் இடமாக உயர் தொழில்நுட்ப ஆய்வகங்களைப் பயன்படுத்த கூடாது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.