சமயநல்லூர் அருகே பழங்குடியினர் சான்றிதழ் கேட்டு பள்ளி மாணவர்கள் பள்ளி வகுப்புகளை புறக்கணித்து பெற்றோர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே உள்ள சத்தியமூர்த்தி நகர் பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். அவர்களில் காட்டுநாயக்கன் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் பலர் உள்ளனர். இந்த சமூக மக்களுக்கு இந்து , காட்டு நாயக்கன் எனக்குறிப்பிட்டு பட்டியலின (ST) சாதிச் சான்றிதழ் வழங்கப்பட்டு வந்தது. இந்த சமூகத்தைச் சேர்ந்த மாணவ ,மாணவிகளுக்கு பட்டியலின சாதிச்சான்றிதழே இதுவரை வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது மாவட்ட நிர்வாகம் பட்டியலின சான்று வழங்க மறுப்பு தெரிவிப்பதாக கூறப்படுகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து காட்டுநாயக்கன் சமுதாய மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் பள்ளிக்கூட புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.