தமிழகத்தில் நான்கு மாவட்டங்களில் பள்ளிகளில் தூய்மைப் பணி மேற்கொள்ள ரூபாய் 1.90 கோடி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
மழை வெள்ள நீரில் மூழ்கிய கொரட்டூர் இ எஸ் ஐ மருத்துவமனை மருந்துகள்!
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘மிக்ஜாம்’ புயலால் ஏற்பட்ட வரலாறு காணாத பெருமழையின் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மாணவர்களின் நலன் கருதி, தமிழக அரசால் பள்ளிகளுக்கு டிசம்பர் 04- ஆம் தேதி முதல் டிசம்பர் 09- ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டது.
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் அறிவுரைகளின்படி, ‘மிக்ஜாம்’ புயல் மழையினால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளி வளாகங்களை சுத்தம் செய்து, டிசம்பர் 11- ஆம் தேதி அன்று பள்ளி திறக்கும் நாளில் நல்ல கற்றல் சூழலை உருவாக்கும் விதமாக பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
இவற்றைக் கண்காணிக்க பள்ளிக் கல்வித் துறையைச் சார்ந்த 17 அதிகாரிகள் 4 மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இப்பணிகளுக்காக சென்னை, செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களுக்கு தலா 50 லட்சம் ரூபாயும், காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு 40 லட்சம் ரூபாயும், ஆக மொத்தம் 1 கோடியே 90 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சென்னையை உலுக்கிய மிக்ஜாம் புயல்- விஜய் டிவி புகழ் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி
இம்மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் தங்களது பாடப்புத்தகம் மற்றும் நோட்டுப்புத்தகம் உள்ளிட்ட உடைமைகளை இழந்த மாணவர்களுக்கு, பள்ளிகள் திறந்தவுடன் பாடப் புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், சீருடை மற்றும் புத்தகப்பை போன்ற பொருட்களை வழங்க டிசம்பர் 11- ஆம் தேதி மாணவர்களின் தேவைகளைக் கண்டறிந்து, டிசம்பர் 12- ஆம் தேதி அன்று பாடப்புத்தகம் மற்றும் நோட்டுப் புத்தகம் உள்ளிட்டவை வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது.” இவ்வாறு அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.