Homeசெய்திகள்தமிழ்நாடுசென்னை உள்பட 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை..

சென்னை உள்பட 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை..

-

ஆவடி சுற்றுவட்டார பகுதிகளில் 1 மணி நேரத்திற்கு மேலாக இடைவிடாது கன மழை பெய்து வருகிறது.
கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர் உள்பட 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் கடந்த 26ம் தேதி உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது. இது அடுத்த 48 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருக்கிறது. அத்துடன் இன்று சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படியே சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காலை முதலே மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இடைவிடாது கொட்டித்தீர்த்த கனமழையால் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியுள்ளது. சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் மழைநீரால் வாகன ஓட்டிகள் கடும் சிரமங்களுக்கு ஆளாகினர்.

பள்ளிகளுக்கு விடுமுறை

நாளையும் மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்திருக்கிறது. அத்துடன் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

ஆகையால் பாதுகாப்பு கருதி தமிழகத்தில் 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

MUST READ