சீமான் குறித்து கருத்து தெரிவித்த விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனின் சகோதரர் மகன் கார்த்திக் மனோகரன் குறித்து ஆபாச வார்த்தையால் விமர்சித்த சீமானுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், பெரியார் குறித்து உண்மைக்கு புறம்பாகவும், தொடர் அவதுறுகளை பரப்பி வருகிறார். இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரபாகரனின் அண்ணன் மகனான கார்த்திக் மனோகரன் அளித்த பேட்டியில் சீமான், பிரபாகரனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் போலியானது என்றும், அவர் பிரபாகரன் குறித்து உண்மைக்கு மாறான தகவல்களை தெரிவிப்பதாகவும் குற்றம்சாட்டியிருந்தார். இந்த நிலையில் கோவையில் செய்தியாளரை சந்தித்த சீமானிடம், பிரபல தொலைக்காட்சி பெண் செய்தியாளர் கார்த்திக் மனோகரன் குற்றச்சாட்டுகள் தொடர்பாக கேள்வி எழுப்பினார். அப்போது, கார்த்திக் மனோகரன் குறித்து அருவருக்கத்க்க ஆபாசமான கருத்துக்களை தெரிவித்தார். இது பார்வையாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் சீமானின் செயலுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை பத்திரிகையாளர் மன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஊடகங்களில் உரையாடும் எளிய மனிதர்களே நாகரிகமான சொற்களை பயன்படுத்தும்போது,ஒரு கட்சித்தலைவரான சீமான் பொது இடங்களிலும் ஊடக சந்திப்புகளிலும் தொடர்ந்து ஆபாச மற்றும் இழி சொற்களை பயன்படுத்துவது அதிர்ச்சி அளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவையில் நடைபெற்ற ஊடகச் சந்திப்பில் பிரபாகரனின் அண்ணன் மகன், சீமான் மீது எழுப்பியிருக்கும் குற்றச்சாட்டுகளை கேள்வியாக எழுப்பிய தனியார் தொலைக்காட்சி பெண் செய்தியாளரிடம் முகம் சுளிக்கும் வகையில் சீமான் பதில் அளித்துள்ளார் என்றும் குற்றம்சாட்டியுள்ளனர். பெண் செய்தியாளருக்கு பதில் அளிக்கிறோம் என்ற கவனமும், பொறுப்பும் இல்லாமல் அச்சிலேற்ற முடியாத வார்த்தைகளை கொண்டு சீமான் பேசியிருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சீமான் பொது இடங்களிலும், ஊடக சந்திப்புகளிலும் முதிர்ச்சியான சொற்களை பயன்படுத்துவதும், கண்ணியமாக நடந்துகொள்ள வேண்டும் என சென்னை பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்தியுள்ளது.