Homeசெய்திகள்தமிழ்நாடுலூப் சாலை தொடர்பான தீர்ப்பை மறுபரிசீலனை செய்க - சீமான்..

லூப் சாலை தொடர்பான தீர்ப்பை மறுபரிசீலனை செய்க – சீமான்..

-

மெரினா இணைப்புச் சாலை தொடர்பான தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை மெரினா கடற்கரையில் கலங்கரை விளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரையிலான லூப் சாலையில் செயல்பட்டு வரும் சிறு மீன் கடைகள், உணவகங்களை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனடிப்படையில் சென்னை மாநகராட்சி ஆக்கிரமிப்புக் கடைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டது. ஆனால் ஆக்கிரமிப்பு என்றுகூறி சிறு கடைகளை அகற்றுவதை எதிர்த்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டார்.

 லூப் சாலை தொடர்பான தீர்ப்பை மறுபரிசீலனை செய்க - சீமான்..

போராட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “வட இந்திய தொழிலாளர்கள் இங்கு வரும்போது பாவம் வயிற்று பிழைப்பிற்காக வேலையில்லாமல் வருகின்றனர். ஐயோ பாவம் என்று பேசியவர்கள் எல்லாம், என் மக்கள் எங்கே போவார்கள்? அவர்கள் வயிற்றுப் பிழைப்பிற்காகத்தானே இந்த மீனை வாங்கி வியாபாரம் செய்து சாப்பிடுகின்றனர் ஒரு முறை பேசுங்கள். எங்களுக்காகவும் அந்த ஐயோ, பாவத்தை பயன்படுத்துங்கள். ஒருவரும் வருவது இல்லை. நீதிபதிகள், மெரினா இணைப்புச் சாலை தொடர்பான தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இது எங்கள் மக்களின் நீண்டநாள் வாழ்விடம், வாழ்வாதாரம். நீதிமன்ற தீர்ப்பு அதை சிதைக்கும் வகையில் அமைந்துள்ளது.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களைச் சந்திக்கும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் அதுபோல் எதுவும் நடக்காது, தைரியமாக இருக்குமாறு கூறுகின்றனர். ஆனால், சென்னை மாநகராட்சி உடனடியாக கடைகளை காலி செய்யும்படி மக்களுக்கு நெருக்கடி கொடுத்து துன்புறுத்துகிறது. இதனால், இப்பகுதி மக்கள் மீன்பிடிக்கச் செல்லவில்லை, வியாபாரம் செய்யவில்லை, கொளுத்தும் வெயிலில் பசி பட்டினியுடன் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

லூப் சாலை - சீமான் போராட்டம்

நீதிமன்றம் கூறும் அனைத்தையும் அரசு உடனுக்குடன் நிறைவேற்றுகிறதா? மக்களின் வீட்டை இடிப்பதிலும், கடைகளை காலி செய்வதிலும் இவ்வளவு வேகத்தை காட்டுகிறீர்களே? நீதிமன்றம் கூறியதை எல்லாம் உடனுக்குடன் நிறைவேற்றிவிட்டீர்களா? மீனவ மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று அரசு உடனடியாக பதில் மனு தாக்கல் செய்திருக்க வேண்டும். கடைகளை காலி செய்யும் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்திருக்க வேண்டும். அதை அரசு செய்யவில்லை. 4,5 பகுதிகளைச் சேர்ந்த மீனவ மக்கள் போராடி வருகின்றனர். இதை நாடெங்கும் வெடிக்கும் போராட்டமாக அரசு மாற்றி விடக்கூடாது” என்று கேட்டுக்கொண்டார்.

MUST READ