Homeசெய்திகள்தமிழ்நாடுபரந்தூர் வானூர்தி நிலையத் திட்டத்தினைக் கைவிட வேண்டும் - சீமான்

பரந்தூர் வானூர்தி நிலையத் திட்டத்தினைக் கைவிட வேண்டும் – சீமான்

-

சீமான்

பரந்தூர் வானூர்தி நிலையத் திட்டத்தினைக் கைவிட வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பரந்தூர் வானூர்தி நிலையத் திட்ட எதிர்ப்புப் போராட்டக் குழுவினர் தங்கள் கிராமங்களுக்கு சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடத்தாததை எதிர்த்தும், பரந்தூர் பன்னாட்டு வானூர்தி நிலையத்திற்காகத் தங்கள் நிலங்களைக் கையகப்படுத்தும் அரசின் எதேச்சதிகாரப் போக்கினை நிறுத்த வலியுறுத்தியும், இன்று (03.07.2024) காலை, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் எதிரில் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட முனைந்தனர். அப்பொழுது, தமிழ்நாடு காவல் துறையால் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளது கடும் கண்டனத்திற்குரியது. 700 நாட்களுக்கும் மேலாகப் போராடி வரும் பரந்தூர் வானூர்தி நிலையத் திட்ட எதிர்ப்புப் போராட்டக் குழுவினர் மற்றும் ஏகனாபுரம் மக்களின் உறுதித்தன்மை நாம் அனைவரும் பின்பற்ற வேண்டியது.

தொடர்ந்து அரசுக்கு அழுத்தம் கொடுக்கக்கூடிய போராட்டக் குழுவினரின் அனைத்துப் போராட்டங்களுக்கும் நாம் தமிழர் கட்சி ஆதரவளிக்கும். உண்ணாநிலை போராட்ட முறையை நாம் ஆதரிப்பதில்லை என்றாலும், தொடர்ந்து போராடி வரும் மக்களை ஒருமுறைக் கூட நேரில் சென்று சந்திக்காத முதல்வரும், தமிழ்நாடு அரசுமே அவர்களை இந்நிலைக்குத் தள்ளியுள்ளதை நாம் உணர வேண்டும். போராடும் மக்களின் கோரிக்கை என்னவென்பதைக் கூடக் கேட்டறியாமல் தொடர்ந்து நிலம் கையகப்படுத்துவதிலும், சிறைப்படுத்துவதிலும் ஈடுபடும் அரசு, மக்களை ஓர் உயிராகக் கூடக் கருதாமல், அடிப்படை மனித உரிமைகளைக் கூட கடைப்பிடிக்காமல் செயல்படுவது கொடுங்கோன்மையாகும்.

சீமான் - என்.எல்.சி-க்கு துணைபோவதை திமுக அரசு கைவிட வேண்டும் - சீமான் வலியுறுத்தல்..

மணிப்பூரில் சொந்த நாட்டு மக்களின் துயரை நேரில் சென்று பார்க்காத மோடி எப்படி எதிர்க்கப்பட வேண்டியவரோ, அதேபோல் பரந்தூரில் போராடும் மக்களை 2 ஆண்டுகளில் ஒருமுறைக் கூட நேரில் சென்று குறைகேட்காத ஸ்டாலின் அவர்களும் எதிர்க்கப்பட வேண்டியவரே. மக்களை புறக்கணிக்கும் ஆட்சியாளர்களை மக்களும் புறக்கணிப்பார்கள் என்றுணர்ந்தாவது பரந்தூர் வானூர்தி நிலையத் திட்டத்தினைக் கைவிட வேண்டும் என்று ஒன்றிய – மாநில அரசுகளை வலியுறுத்துகிறேன். மேலும், தற்பொழுது சிறைப்பிடிக்கப்பட்டுள்ள 20 உறவுகளையும் உடனடியாகத் தமிழ்நாடு அரசு விடுவித்து அவர்களின் அடிப்படைக் கோரிக்கைகளுக்குச் செவிமடுக்கக் கேட்டுக்கொள்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

 

MUST READ