நடிகை விஜயலட்சுமி புகாரில் சீமானுக்கு மீண்டும் சம்மன்
திருமணம் செய்து ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரில் 2-வது முறையாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது கடந்த 2011ஆம் ஆண்டு நடிகை விஜயலட்சுமி திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிவிட்டதாக வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் பாலியல் பலாத்காரம், மோசடி, பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் சீமான் மீது போலீசார் வழக்குபதிவு செய்தனர். ஆனால் இவ்வழக்கில் சீமானை போலீசார் கைது செய்யவில்லை. இந்நிலையில் சமீபத்தில் மீண்டும் நடிகை விஜயலட்சுமி பாலியல் வழக்கில் சீமானை கைது செய்ய வேண்டும் என காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து நடிகை விஜயலட்சுமியை கோயம்பேடு துணை ஆணையர் உமையாள் தலைமையிலான போலீசார் இரண்டு நாட்களாக விசாரணை நடத்தி வாக்குமூலத்தை பதிவு செய்தனர். பின்னர் திருவள்ளூர் மகிளா நீதிமன்றத்தில் நடிகை விஜயலட்சுமியிடம் மாஜிஸ்ட்ரேட் வாக்குமூலம் பெற்றார். 7 முறை சீமான் கட்டாயத்தின் பேரில் கருக்கலைப்பு செய்ததாக நடிகை விஜயலட்சுமி புகாரில் தெரிவித்த நிலையில், நடிகை விஜயலட்சுமிக்கு மருத்துவ பரிசோதனையும் செய்யப்பட்டது.
இந்நிலையில் கடந்த 9 ஆம் தேதி நடிகர் விஜயலட்சுமியின் பாலியல் புகார் குறித்த விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது. ஆனால் அன்றைய தினம் சீமான் விசாரணைக்கு காவல்நிலையத்தில் ஆஜராகவில்லை. இந்நிலையில் சென்னை பாலவாக்கத்தில் உள்ள சீமான் வீட்டிற்கு நேரில் சென்ற போலீசார், அவரை மீண்டும் வரும் 15 ஆம் தேதி காவல்நிலையத்தில் ஆஜராகும்படி இரண்டாவது சம்மன் அளித்தனர். அப்போது அன்றைய தினம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதால் காவல்நிலையத்தில் ஆஜராக முடியாது என சீமான் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். வேண்டுமென்றால் வரும் 18 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகிறேன் என காவல்துறையிடம் சீமான் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.