பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிரான மக்கள் போராட்டத்தை நாம் தமிழர் கட்சி முழுமையாக ஆதரிக்கிறது என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
சென்னையின் 2-வது விமான நிலையம் அமைப்பதற்காக பரந்தூரில் சுமார் 5000 ஏக்கர் பரப்பளவில் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ள நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். மக்கள் நடத்தி வரும் போராட்டம் இன்று 550-வது நாளை எட்டியுள்ளது. இதனை தொடர்ந்து இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்தவும் அப்பகுதி மக்கள் முடிவு செய்துள்ளனர். இந்த நிலையில், பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிரான மக்கள் போராட்டத்தை நாம் தமிழர் கட்சி முழுமையாக ஆதரிக்கிறது என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பரந்தூரில் வானூர்தி நிலையம் அமைப்பதற்கெதிராக ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராமங்களைச் சேர்ந்த மண்ணின் மக்களால் 550வது நாட்களாக நடத்தப்பட்டு வரும் அறப்போராட்டத்தை நாம் தமிழர் கட்சி முழுமையாக ஆதரிக்கிறது. ஆளும் வர்க்கத்தின் அடக்குமுறை, ஒடுக்குமுறைகளுக்கு அஞ்சாது அயராது போராடி வரும் மக்களின் போர்க்குணமும், போராட்ட உணர்வும் போற்றுதற்குரியது. இதே பற்றுறுதியோடும், உறுதிப்பாடோடும் இறுதிவரை நின்று, போராட்டத்தின் நோக்கத்தில் வெற்றியடைய எனது உளப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்வதோடு, மண்ணின் மக்களோடு எப்போதும் நாம் தமிழர் கட்சி துணைநிற்கும் என இச்சமயத்தில் உறுதியளிக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.