பா.ஜ.க.வின் ஏஜெண்டாக இருக்கிற ஆர்.என். ரவி ஆளுநர் பொறுப்பிலிருந்து உடனடியாக விலக வேண்டுமென்பதே தமிழக மக்களின் ஒட்டுமொத்த கோரிக்கையாகும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக ஆளுநராக ஆர்.என். ரவி நியமிக்கப்பட்டது முதற்கொண்டு அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தி.மு.க. ஆட்சிக்கு எதிராக பல்வேறு தடைகளை ஏற்படுத்தி வருகிறார். கடந்த காலங்களில் தமிழக சட்டப்பேரவையால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டிய கடமை அவருக்கு உண்டு. ஆனால், அரசமைப்புச் சட்ட உறுப்பு 163(1)-ன்படி அமைச்சரவையின் ஆலோசனையோ, அறிவுரையோ இன்றி தன்னிச்சையாக ஆளுநர் செயல்பட முடியாது என்று தெளிவாக கூறுகிறது. இதில் அவருக்குள்ள விருப்புரிமை மிகமிக குறைவானதே ஆகும். இந்நிலையில் தமிழக சட்டப்பேரவை நிறைவேற்றிய நீட் தேர்வு விலக்கு உள்ளிட்ட பத்திற்கும் மேற்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் ஆளுநர் முடக்கி வருகிறார். இது அப்பட்டமான தமிழக விரோத செயலாகும்.
சொத்து குவிப்பு வழக்கு ஒன்றில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடிக்கும், அவரது மனைவிக்கும் விதிக்கப்பட்ட தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்து கடந்த 11 ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது. அதைத் தொடர்ந்து, திருக்கோவிலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக பொன்முடி நீடிக்கிறார் என்று சட்டப்பேரவை சபாநாயகர் அறிவித்திருந்தார். இந்நிலையில், பொன்முடியை மீண்டும் அமைச்சராக்க வேண்டும் என்ற பரிந்துரையுடன் ஆளுநர் ஆர்.என். ரவிக்கு முதலமைச்சர் கடிதம் எழுதினார். இதனடிப்படையில் ஆளுநர், பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்து வைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், முதலமைச்சர் எழுதிய கடிதத்திற்கு “உச்சநீதிமன்றம் அவரை நிரபராதி என்று தீர்ப்பு வழங்கவில்லை. அவர் மீதான குற்றச்சாட்டுகள் அப்படியே இருக்கின்றன. எனவே, பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க முடியாது” என்று ஆளுநர் பதில் கூறியிருந்தார்.
ஆளுநரின் இந்த செயல் தி.மு.க. உள்ளிட்ட அனைத்து கட்சியினரையும் கொந்தளிக்க செய்தது. அரசமைப்புச் சட்டப்படி ஓர் உயர்ந்த பொறுப்பில் இருக்கும் ஆர்.என். ரவி, பா.ஜ.க.வின் மாநிலத் தலைவர் போல நடந்து கொள்வதை எவரும் ஏற்றுக் கொள்ள முடியாது. உச்சநீதிமன்றம் தண்டனையை நிறுத்தி வைத்த பிறகு பொன்முடிக்கு பதவி பிரமானம் செய்து வைக்க சட்டரீதியாக தடை ஏதும் இல்லாத நிலையில் தி.மு.க. மீது ஆளுநருக்கு உள்ள வன்மத்துடன், வேண்டுமென்றே பதவி பிரமாணம் செய்து வைக்காமல் சண்டித்தனம் செய்து வருவதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன்.
இந்நிலையில், பொன்முடிக்கு அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைப்பதை மறுக்கும் ஆர்.என். ரவிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடுத்தது. இதன்படி உறுப்பு 164, உட்பிரிவு 1-ஐ ஆளுநர் அப்பட்டமாக மீறுவதாக முறையிடப்பட்டது. முதல்வர் பரிந்துரைத்த பின்பும் பொன்முடிக்கு அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் மறுத்து வருவது சட்டவிரோதம் என கூறப்பட்டது. இதனை அவசர வழக்காக விசாரித்த உச்சநீதிமன்றம், “உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு தடை விதித்த பிறகும் பொன்முடிக்கு பதவியேற்பு நடத்தி வைக்க ஆளுநர் மறுப்பது ஏன் ? நீதிமன்ற உத்தரவை மீறி பதவி பிரமாணம் செய்து
வைக்க முடியாது என்று அவர் எப்படி கூற முடியும் ? இதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. ஆளுநர் மீது நடவடிக்கை எடுக்க நேரிடும். நாங்கள் கண்ணை மூடிக்கொண்டு இருக்கவில்லை. ஆளுநரின் செயல் அரசியல் சாசனத்திற்கு எதிரானது. எனவே, பொன்முடிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பது குறித்து பதிலளிக்க ஆளுநருக்கு நாளை வரை அவகாசம் வழங்குகிறோம்.
இல்லையென்றால் உரிய நடவடிக்கை எடுப்போம்” என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு ஆளுநருக்கு எதிராக கடுமையான கேள்விக் கணைகளை எழுப்பி எச்சரித்திருக்கிறது. இதற்குப் பிறகும் பொன்முடி அமைச்சராக ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைக்கவில்லை என்றால் ஆளுநர் பொறுப்பிலிருந்து அவரை தூக்கி எறிகிற காலம் வெகு தொலைவில் இல்லை என்பதை உச்சநீதிமன்ற தீர்ப்பு நமக்கு உணர்த்துகிறது. 21.03.2024 எனவே, அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராகவும், தமிழகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை முடக்குகின்ற வகையிலும் செயல்படுகிற பா.ஜ.க.வின் ஏஜெண்டாக இருக்கிற ஆர்.என். ரவி ஆளுநர் பொறுப்பிலிருந்து உடனடியாக விலக வேண்டுமென்பதே தமிழக மக்களின் ஒட்டுமொத்த கோரிக்கையாகும். இதனை பா.ஜ.க. அரசு செயல்படுத்தவில்லை என்றாலும் உச்சநீதிமன்றம் உரிய நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறோம் என குறிப்பிட்டுள்ளார்.