ஆளுநர் வேண்டுமென்றே விஷமத்தனம் செய்ய, அவையின் மாண்பை சிதைக்கத் திட்டமிட்டு இப்படிப்பட்ட செயலை செய்கிறார் என காங்கிரஸ் சட்டப்பேரவை குழுத் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
நடப்பாண்டிற்கான முதல் சட்டப்பேரவைக் கூட்டம் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. சட்டப்பேரவை தொடங்கியதும் தேசிய கீதம் புறக்கணிக்கப்பட்டுள்ளது என கூறி சட்டப்பேரவையில் தமிழ்நாடு அரசு வழங்கிய உரையை படிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி புறக்கணித்தார். இதனால் சட்டப்பேரவையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை சட்டப்பேரவை தலைவர் அப்பாவு வாசித்தார். தமிழக அரசின் உரையை படிக்காமல் புறக்கணித்த ஆளுநர் ஆர்.என்.ரவி. சட்டப்பேரவையில் இருந்து தேசிய கீதம் பாடுவதற்கு முன்பே கிளம்பினார். முன்னதாக தமிழக அரசின் உரையை புறக்கணித்தது தொடர்பாக பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, தேசிய கீதத்தை தொடக்கத்திலும், இறுதியிலும் பாட வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தேன். . அரசின் உரையை வாசித்தால், அரசியலமைப்பு சட்டத்தில் குழப்பம் ஏற்படும் என்பதால் வாசிக்கவில்லை. உரையில் உண்மைக்கு புறம்பான தகவல்கள் இருந்ததால், முழுமையாக வாசிக்க விரும்பவில்லை என கூறினார்.
இந்த நிலையில், ஆளுநர் திட்டமிட்டே அவையின் மாண்பை சிதைத்துள்ளார் என காங்கிரஸ் சட்டப்பேரவை குழு தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். இது தொடர்பாக செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது: ஆளுநர் வேண்டுமென்றே விஷமத்தனம் செய்ய, அவையின் மாண்பை சிதைக்கத் திட்டமிட்டு இப்படிப்பட்ட செயலை செய்கிறார். ஆளுநர் உரைக்கு ஒப்புதல் அளித்துவிட்டு இங்கு வந்து நாடகம் அரங்கேற்றம் செய்கிறார். இதனை வன்மையாக கண்டிக்கிறோம். ஆளுநரை மாண்போடு நடத்துகிறார்கள், ஆனால் அவர் தொடர்ந்து ஜனநாயகத்தை பாதுகாப்பதில் தவறுகிறார் என கூறினார்.