பஹ்ரைன் கடலோரக் காவல் படையால் கைது செய்யப்பட்ட 28 தமிழக மீனவர்களுக்கான தண்டனை காலம் 6 மாதத்தில் இருந்து 3 மாதமாக குறைக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் இடிந்தகரையை சேர்ந்த 28 மீனவர்கள், ஈரான் நாட்டில் தங்கி மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வந்த நிலையில், கடந்த செப்டம்பர் 11ஆம் தேதி எல்லைதாண்டிச் சென்றதாகக் கூறி, பஹ்ரைன் கடலோரக் காவல் படையால் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்களுக்கு 6 மாத காலம் சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், பஹ்ரைன் கடலோரக் காவல் படையால் கைது செய்யப்பட்ட 28 தமிழக மீனவர்களை விரைவில் விடுவிக்க தேவையான சட்ட உதவிகள் மற்றும் தூதரக உதவிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி இருந்தார். அதன் பேரில் இந்திய துதரக அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக தற்போது தமிழக மீனவர்களின் தண்டனைக்காலம் 6 மாதத்தில் இருந்து, 3 மாத காலமாக குறைக்கப்பட்டுள்ளது.