சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் ஜாமின் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு, சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.
சட்டவிரோதப் பணப்பரிமாற்றத் தடைச் சட்ட வழக்கில் கடந்த 2023- ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14- ஆம் தேதி அமலாக்கத்துறையால் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து, சென்னை மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு ஆஜர்படுத்தப்பட்ட அவர், சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கீழமை நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் என அனைத்து நீதிமன்றங்களிலும் செந்தில் பாலாஜி தரப்பில் பலமுறை ஜாமீன் கோரி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், அடுத்தடுத்து தள்ளுபடி செய்யப்பட்டன. இலாகா இல்லாத அமைச்சராக பல மாதங்கள் இருந்து வந்த நிலையில், செந்தில் பாலாஜி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இந்த நிலையில், சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் ஜாமின் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றம் அவரது ஜாமின் மனுவை தள்ளுபடி செய்த நிலையில், அவர் இரண்டாவது முறையாக தாக்கல் செய்துள்ளார். தலைமறைவாக உள்ள செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் தேடப்பட்டு வரும் நிலையில், செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் தர அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது. இதனால் தான அவரது ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.