புழல் சிறையில் உள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதையடுத்து, அவர் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவர்கள் பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சராக பொறுப்பில் இருந்தபோது சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் செந்தில் பாலாஜி அமலாக்கத் துறையினரால் கடந்தாண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்டார்.
சிறையில் அடைக்கப்பட்டு வீடியோ கான்பரன்ஸ் மூலமாக வழக்கு விசாரணைக்கு ஆஜராகி வந்த நிலையில் 3 மாதங்களுக்குப் பிறகு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த வாரம் நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்தப்பட்டு, 47வது முறையாக அவரது நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த செந்தில் பாலாஜிக்கு புழல் சிறையில் நேற்று மாலை 3.30 மணியளவில் நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனை தொடர்ந்து போலீசார் உடனடியாக பரிசோதனைக்காக அவரை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட செந்தில் பாலாஜிக்கு இசிஜி பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில், செந்தில் பாலாஜியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மூச்சு விடுவதில் இருந்த சிரமமும் தற்போது சரியாகியுள்ளது. தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.