தமிழக அரசு செய்திக்காக அரசியல் செய்ய வேண்டாம் சேவை அரசியல் செய்ய வேண்டும் என சீமான் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள அகிலி கிராமத்தில் 50க்கும் மேற்பட்ட இருளர் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அவர்களை இன்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் சந்தித்து, அவர்களது குறைகளை கேட்டறிந்தார்.
அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சீமான், “கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக இங்கு வாழ்ந்து வரும் இருளர் இன மக்களுக்கு மின்சாரம், குடிநீர் போன்ற எந்த அடிப்படை வசதிகளும் இதுவரை செய்து தரப்படவில்லை என்று கூறுகின்றனர்.
மேலும், அவர்கள் வசிக்கும் இடத்தை வீட்டுமனை போட்டு விற்பனை செய்ய உள்ளதாகவும், ஆகையால் உடனே இங்கிருந்து காலி செய்யுமாறு தனிநபர்கள் மிரட்டி வருவதாகவும் குற்றம் சாட்டுகின்றனர்.
மீண்டும் காட்டுப்பகுதிக்கே போகச்சொல்லி விரட்டியடிப்பதாகவும் கவலை தெரிவிக்கின்றனர். நான் இருக்கும் வரை இந்த மக்களை காலி செய்ய முடியாது.
தமிழக அரசு செய்திகளுக்காக அரசியல் செய்வதை விட சேவை அரசியல் செய்ய வேண்டும்.
இதற்காக என்னை போராட வைக்க வேண்டாம். நரிக்குறவர்களை நேரில் பார்த்து அப்பெண்கள் சொல்லும் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு செய்வது போல், ஆதி தமிழ் குடிமக்களான இவர்களையும் அரசு கருத்தில் கொண்டு இவர்களையும் அணுகி இவர்களுடைய அடிப்படை கோரிக்கை மற்றும் துயரை தீர்க்க வேண்டும்” என்று சீமான் கேட்டுக்கொண்டார்.