காங்கேயத்தைச் சேர்ந்த வியாபாரி ஒருவரிடம், போலீஸ் எனக் கூறி ஐம்பது லட்சம் ரூபாயை பறித்து சென்ற வழக்கில் வேலூரை சேர்ந்த தம்பதி உள்பட ஆறு பேர் கொண்ட கும்பலை சேலம் இரும்பாலை போலீசார் அதிரடியாக கைது செய்து அவர்களிடமிருந்து 30 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் போலீஸ் வேடத்தில் வந்த மூன்று பேரை கைது செய்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.
திருப்பூர் மாவட்டம் , காங்கேயம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன்(37). இவர் புற்று நோயை குணப்படுத்த பயன்படும் செங்காந்தள் விதைகளை வாங்கி வியாபாரம் செய்து வருகிறார். இவரிடம் சேலத்தைச் சேர்ந்த கும்பல் ஒன்று 50 லட்சம் பழைய ரூபாய் நோட்டுகளை கொடுத்தால் 15 லட்சம் ரூபாய் கூடுதலாக தருவதாக ஒரு கும்பல் தெரிவித்துள்ளது. இதனை நம்பி கடந்த செப்டம்பர் 26 ந் தேதி 50 லட்சம் ரூபாய் பணத்துடன், வெங்கடேசன், காரில் சேலம் வந்துள்ளார்.
அவர் இரும்பாலை பகுதியில் வந்த போது போலீஸ் உடையில் வந்த மூன்று பேர், காரை வழிமறித்து நிறுத்தி, காரில் சோதனை மேற்கொண்டனர். அப்போது காரில் 50 லட்சம் ரூபாய் பணம் இருந்தது தெரிய வந்து, நீங்கள் வைத்திருப்பது கருப்பு பணம் எனக்கூறி , அந்த பணப்பையை எடுத்துக்கொண்ட அவர்கள் , வெங்கடசுடன் வந்திருந்த குமார் மற்றும் வாஞ்சியப்பன் ஆகியோரை தங்களது காரில் ஏற்றிக்கொண்டு , வெங்கடேசனை , பின் தொடர்ந்து இரும்பாலை போலீஸ் ஸ்டேஷனுக்கு வரும்படி கூறிவிட்டு தப்பிவிட்டனர்.
இந்த நிலையில் வெங்கடேசன், இரும்பாலை காவல் நிலையத்திற்கு வந்து கேட்டபோது தான், அவர் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது . போலீஸ் உடையில் வந்தவர்கள் உண்மையான போலீசார் இல்லை என்பதும் , அவர்கள் தன்னிடம் இருந்த 50 லட்ச ரூபாயை ஏமாற்றி பறித்துச் சென்றதும் தெரியவந்தது. இதனையடுத்து வெங்கடேசன், இது குறித்து இரும்பாலை போலீசாரிடம் புகார் தெரிவித்தார்.
இந்த நிலையில் தான் , இரும்பாலை போலீசார் வழக்கு பதிவு செய்து , தீவிர விசாரணை நடத்தி வந்தனர். மேலும் சேலம் மாநகர காவல் ஆணையர் விஜயகுமாரி தனிப்படைகளை அமைத்து , குற்றவாளிகளை விரைவில் பிடிக்க உத்தரவிட்டார். இதனை அடுத்து தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில், 50 லட்சம் பணப்பறிப்பில் முக்கிய குற்றவாளியான வேலூர் மாவட்டம் காட்பாடி பகுதியை சேர்ந்த நடராஜன் என்பவர் செயல்பட்டது தெரியவந்தது.
இதனால் தனிப்படை போலீசார் நடராஜனை தேடி வந்த நிலையில் , கடந்த 22 ஆம் தேதி சேலம், சித்தர்கோயில் அருகே நாயக்கன்பட்டியை சேர்ந்த துரைப்பாண்டி என்பவரிடம் ஒரு கும்பல் பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக கூறியுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார், அந்த கும்பலை , துரைப்பாண்டியன் மூலம் நைசாக வரவழைத்து , துரை பாண்டியனிடம் பணத்தை வாங்க முற்பட்டபோது, நான்கு பேரையும் சுற்றி வளைத்து போலீசார் பிடித்தனர். இந்த விசாரணையில் 50 லட்சம் ரூபாயை பறித்து சென்ற வழக்கில் போலீசாரால் தேடப்பட்ட நடராஜன் , அவரது கூட்டாளிகளான மாமாங்கம் பகுதியைச் சேர்ந்த ஜெயமோகன், சேலம் கீரபாப்பம்பாடி புதூரைச் சேர்ந்த மகாலிங்கம், தர்மபுரி மாவட்டம் அரூர், பெரியார் நகரை சேர்ந்த கோபி ராஜா ஆகியோர் தான் இவர்கள் என தெரிய வந்தது.
பின்னர் அவர்களை கைது செய்து, கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதில், வெங்கடேசனிடம் பறிக்கப்பட்ட 50 லட்சம் ரூபாய் பணத்தை, தர்மபுரி மாவட்டம் மொரப்பூருக்கு கொண்டு சென்று, அங்கு ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார், மொரப்பூர் சென்று சம்பந்தப்பட்ட வீட்டில் சோதனையிட்டுள்ளனர். அப்போது அங்கிருந்த முப்பது லட்ச ரூபாய் பணத்தை மீட்டுள்ளனர். மேலும் பணத்தை பதுக்கி வைக்க உடந்தையாக இருந்த நடராஜனின் மனைவி சுஜாதா , பூசாரிபட்டியைச் சேர்ந்த சீனிவாசன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து நடராஜனிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் ,
வேலூர் காட்பாடியை சேர்ந்த தானும் , தன் மனைவி சுஜாதாவும் ஒரு கும்பலை தங்கள் வசம் வைத்துக்கொண்டு தங்களிடம் பெரிய அளவில் கருப்பு பணம் இருப்பதாகவும், அதனை மாற்ற 30 சதவீதம் கூடுதல் பணம் கொடுக்கிறோம் எனக் கூறி பலரிடம் மோசடி செய்தது தெரியவந்துள்ளது. மேலும் வேலூரில் இரண்டு பேரிடம் 40 லட்சத்தையும், அரக்கோணத்தில் ஒருவரிடமும் பணத்தைப் பறித்து இவ்வாறு ஏமாற்றி உள்ளனர். அதேபோல காங்கேயம் வெங்கடேசனை 50 லட்சம் கொண்டு வரச் செய்து, அதனை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் நடராஜனுக்கு உதவியாக , போலீஸ் வேடத்தில் நடித்த மூன்று பேரையும் போலீசார் விரைவில் கைது செய்வார்கள் என தெரியவந்துள்ளது.
இந்நிலையில் கைதான நடராஜன் அவருடைய மனைவி சுஜாதா மற்றும் மகாலிங்கம், கோபிராஜா, சீனிவாசன், ஜெகன்மோகன் ஆகிய ஆறு பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் போலீசார் போல் நடித்த மூன்று பேரையும் தனிப்படை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.