Homeசெய்திகள்தமிழ்நாடுசேலம் பெரியார் பல்கலைக்கழக வழக்கில் குற்றவாளிகளை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்!

சேலம் பெரியார் பல்கலைக்கழக வழக்கில் குற்றவாளிகளை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்!

-

- Advertisement -

சேலம் பெரியார் பல்கலைக்கழக மோசடி வழக்கில் தலைமறைவாக உள்ள  பதிவாளர் தங்கவேல், துணை பேராசிரியர் சதீஷ், பாரதிதாசன் பல்கலைக்கழக பேராசிரியர் ராம்கணேஷ் ஆகியோரை தனிப்படை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

சேலம் பெரியார் பல்கலைக்கழக வழக்கில் குற்றவாளிகளை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்!
 

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின்  துணைவேந்தர் ஜெகநாதன் மற்றும் பதிவாளராக இருந்த தங்கவேல் ஆகியோர் கடந்த ஆண்டு பெரியார் பல்கலைக்கழகத்தின் பெயரை பயன்படுத்தி தங்களது பெயரில் தனியார் கல்வி நிறுவனமான பூட்டர் பவுண்டேஷன் என்ற  பெரியார் யூனிவர்சிட்டி டெக்னாலஜி  எண்டர்புரணர்ஸ் அண்டு ரிசர்ச் சென்டர் என்ற பெயரில் பல்கலைக்கழக வளாகத்திலேயே தொடங்கியுள்ளனர். அரசின் எவ்வித அனுமதியும் இல்லாமல் தொடங்கப்பட்ட இந்த தனியார் நிறுவனம் மூலம்  சென்னை,கோவை, சேலம் ஆகிய இடங்களில் உள்ள பத்து  தனியார் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து,  மாணவர்களிடமிருந்து பெறக்கூடிய  கட்டணத்தில் மோசடி நடைபெறுவதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக  பல்கலைக்கழக தொழிலாளர் சங்க சட்ட ஆலோசகர் இளங்கோவன் கடந்த மாதம்  26 ஆம் தேதி சேலம் மாநகர, கருப்பூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.  அப்போது மோசடி புகார் உடன் தன்னை தாழ்த்தப்பட்டோர் என ஏளனம் செய்ததாக எஸ்சி எஸ்டி பிரிவின் கீழ் புகார் ஒன்றினையும்  வழங்கினார்.

இதன் அடிப்படையில் காவல்துறையினர் ஜெகநாதன் மீது மோசடி,  கூட்டு சதி,  கொலை மிரட்டல்,  மற்றும் எஸ்சி/எஸ்டி வன்கொடுமை சட்டப் பிரிவு  உள்ளிட்ட 8 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து உடனடியாக அவரை கைது செய்தனர். பின்னர் நள்ளிரவில் நீதிமன்ற நடுவர் தினேஷ்குமார் வீட்டில் ஆஜர் படுத்தப்பட்டார். வழக்கு தொடர்பாக  விசாரித்த நடுவர் தினேஷ் குமார், துணைவேந்தர் ஜெகநாதனுக்கு  நிபந்தனை ஜாமின் வழங்கி விடுவித்தார்.  இதனை அடுத்து அவர் தற்போது ஜாமினில் உள்ளார்.

இந்த நிலையில் பூட்டர்  பவுண்டேஷன் மோசடி வழக்கில் அதன் சிஇஓ-வாக செயல்பட்ட பதிவாளர் தங்கவேல் மற்றும் இயக்குனர்களாக இருந்த கணினி அறிவியல் துறை துணை பேராசிரியர் சதீஷ், பாரதிதாசன் பல்கலைக்கழக பேராசிரியர் ராம்கணேஷ் ஆகிய மூன்று பேரும்  தொடர்ந்து தலைமறைவாக உள்ள அவர்களை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.

இதனிடையை துணை வேந்தர் ஜெகநாதனுக்கு  ஜாமீன் வழங்கியது தவறு எனக் கூறி அதனை ரத்து செய்ய வேண்டும் என புகார்தாரர் இளங்கோவன் மற்றும் சேலம் போலீசார், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கில்  நீதிமன்ற நடுவர் தினேஷ்குமார் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 12 ந் தேதியான  இன்றைக்கு ஒத்திவைத்தது.

இந்த நிலையில் தான், பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தரை பாதுகாக்கும் விதமாக தமிழ்நாடு ஆளுநர் ரவி, நேற்று திடீரென சேலம் பெரியார் பல்கலைக்கழகத்திற்கு வந்தார். அப்போது தமிழ்நாடு மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பினர்  ஆயிரத்திற்கும்  மேற்பட்டோர் ஆளுநர் வருகைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, பல்கலைக்கழகம் எதிரே போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள துணைவேந்தரை, ஆளுநர் சந்திப்பது சட்டவிரோதம்,  சட்டத்தை மதிக்காத  ஆளுநரே திரும்பிப் போ, என ஆளுநருக்கு  எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். இதனை எடுத்து காவல்துறையினரால் மாணவர் அமைப்பினர் அனைவரும் கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து   பெரியார் பல்கலைக்கழகத்திற்கு வருகை தந்த ஆளுநர் ரவியை,  ஊழல் வழக்கில் கைதாகி ஜாமினில் வந்த  துணைவேந்தர் ஜெகநாதன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். பின்னர் ஆளுநர் ரவி , துணைவேந்தர் அறையில் ஜெகநாதனிடம்  25 நிமிடம் தனியாக ஆலோசனை நடத்தினார். பின்னர் சிண்டிகேட் அரங்கில் நடைபெற்ற பல்கலைக்கழக துறைத்  தலைவர்களுக்கான கூட்டத்தில் பேசிய ஆளுநர் துணை வேந்தருக்கு ஆதரவாக அனைவரும் துணை நிற்க வேண்டும் என்றும் தேவைப்பட்டால் அவருக்கு ஆதரவாக சட்டப் போராட்டம் நடத்துவோம். இந்த விவகாரத்திற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறிவிட்டு ஆளுநர் சென்னை திரும்பினார்.

குற்ற வழக்கில் கைதாகி ஜாமினில் உள்ள துணைவேந்தரிடம் ஆளுநர் ரவி தனியாக சந்தித்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது சட்டவிரோதமானது,  அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என தலைவர்கள் உள்ளிட்ட பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தான், மோசடி வழக்கில் தலைமறைவாக உள்ள பதிவாளர் தங்கவேல் துணை பேராசிரியர் சதீஷ் மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழக பேராசிரியர் ராம் கணேஷ் ஆகிய மூன்று பேரையும் தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.

MUST READ