கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வணிகர்கள்- திமுக நிர்வாகிகள் தொடர்பு குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்திருக்கிறது. 50-க்கும் மேற்பட்டோர் பல்வேறு மருத்துவமனைகளில் மருத்துவம் பெற்று வருகின்றனர். உயிரிழப்புகளின் எண்ணிக்கை நிமிடத்திற்கு நிமிடம் அதிகரித்து வருகிறது. கள்ளச்சாராயத்திற்கு இவ்வளவு பேர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. கள்ளச்சாராயத்தைக் கட்டுப்படுத்துவதில் தமிழக அரசும், காவல்துறையும் முற்றிலுமாக தோல்வியடைந்து விட்டன என்பதையே இது காட்டுகிறது.
கடந்தகால தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொள்வது தான் நல்ல அரசுக்கு அழகு. அதன்படி, கடந்த ஆண்டு மே மாதத்தில் மரக்காணம், மதுராந்தகம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிகழ்விலிருந்து தமிழக அரசு விழித்துக் கொண்டு கள்ளச்சாராய விற்பனையை தடுத்திருக்க வேண்டும். ஆனால், அதை செய்ய அரசு தவறிவிட்டது. மாறாக, சட்டப்பேரவை இன்று கூடும் நிலையில், அதில் இது குறித்து எதிர்க்கட்சிகள் சிக்கல் எழுப்பும் என்பதால், இந்த விவகாரத்தை மூடி மறைக்க அரசு முயன்றது. ஒருகட்டத்தில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை உயர்ந்த பிறகு தான் தமிழக அரசு உண்மையை ஒப்புக்கொண்டது.
கள்ளச்சாராய வணிகத்தை தடுக்கத் தவறிய மாவட்ட ஆட்சியர் இடமாற்றம் செய்யப்பட்டிருப்பதும், காவல்துறை கண்காளிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருப்பதும் சரியான நடவடிக்கை தான் . ஆனால், இது போதுமானதல்ல. கள்ளக்குறிச்சி மாவட்ட கள்ளச்சாராய சாவுகளுக்கு முக்கியக் காரணம் அங்குள்ள கள்ளச்சாராய வியாபாரிகளுக்கு திமுகவினர் கொடுத்த ஆதரவு தான்.
கல்வராயன்மலையில் 24 மணி நேரமும் கள்ளச்சாராயம் காய்ச்சி, மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் விற்கப்படுகிறது. அதற்கு காரணமானவர்களை காவல்துறையினர் கைது செய்தாலும் கூட, கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராக உள்ள எ.வ. வேலுவின் ஆதரவாளரான ரிஷிவந்தியம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன், சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன் உள்ளிட்டோர் தலையிட்டு அவர்களை விடுதலை செய்ய வைக்கின்றனர். அதற்கு மறுப்பு தெரிவிக்கும் காவல் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்படுகின்றனர்.
கடந்த காலங்களில் கள்ளச்சாராய விற்பனைக்கு துணை போக மறுத்த காவல் துணை கண்காணிப்பாளர், காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்ட பலர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதனால், கள்ளச்சாராய வியாபாரிகளுக்கு எதிராக காவல்துறையினரால் சுதந்திரமாக நடவடிக்கை எடுக்க முடியவில்லை. இதற்கெல்லாம் மேலாக கள்ளச்சாராய சாவு தொடர்பாக இப்போது கைது செய்யப்பட்டுள்ள கண்ணுக்குட்டி என்கிற கோவிந்தராஜ் என்ற சாராய வியாபாரி, அண்மையில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் கள்ளக்குறிச்சி தொகுதியில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் மலையரசனுக்கு வாழ்த்து தெரிவித்து கள்ளக்குறிச்சி நான்குமுனை சந்திப்பில் திமுக அலுவலகம் அருகில் பதாகை வைத்துள்ளார். கள்ளச்சாராய சாவு குறித்த செய்தி வெளியான பிறகு தான் நேற்று மாலை அந்த பதாகை அகற்றப்பட்டுள்ளது. அந்த அளவுக்கு சாராய வணிகர்களுக்கும் திமுகவுக்கும் தொடர்பு உள்ளது.
கடந்த ஆண்டு மரக்காணம் பகுதியில் நிகழ்ந்த கள்ளச்சாராய சாவுகளுக்கு காரணமான சாராய வியாபாரி மருவூர் இராஜாவுடன் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் மஸ்தானுக்கு நெருங்கிய உறவு இருந்தது அம்பலமானது. கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவுகளில் சாராய வியாபாரி கண்ணுக்குட்டி என்கிற கோவிந்தராஜ் என்பவருக்கும் திமுகவின் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோருக்கும் இடையே நெருங்கிய உறவு இருப்பது இப்போது உறுதியாகியுள்ளது. இது குறித்து விசாரணை நடத்துவதுடன், கள்ளச்சாராய வணிகத்திற்கு துணை போன அனைவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.