ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி தொடர்ந்து இயங்க அனுமதி
ஸ்டான்லி மற்றும் தருமபுரி மருத்துவக் கல்லூரிகள் மேலும் 5 ஆண்டுகள் தொடர்ந்து இயங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி, திருச்சி கி.ஆ.பெ. விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரி, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி ஆகியவற்றின் கட்டமைப்பு வசதிகளில் சுட்டிக்காட்டப்பட்ட சில குறைகள் சரி செய்யப்படாததைத் தொடர்ந்து அவற்றின் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான அங்கீகாரத்தை தேசிய மருத்துவ ஆணையத்தின் இளநிலை மருத்துவக் கல்வி வாரியம் ரத்து செய்திருந்தது.
இந்நிலையில் தற்போது சென்னை ஸ்டான்லி மற்றும் தருமபுரி அரசு மருத்துவ கல்லூரிகளுக்கான அங்கீகார ரத்து சான்று திரும்பப் பெறப்பட்டு அடுத்த 5 ஆண்டுகளுக்கு தடையில்லா சான்று வழங்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள ஓரிரு சிறு குறைகளும் சரி செய்யப்பட்டு அறிக்கை வழங்கப்பட்டதாகவும், தேசிய மருத்துவ ஆணைய குழுவினர் நேற்று கல்லூரிகளுக்கு நேரடியாக வந்து ஆய்வு செய்ததாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.
மத்திய அரசின் அனுமதி தொடர்பான எழுத்துப்பூர்வ உத்தரவு விரைவில் கிடைத்துவிடும் என நம்பிக்கை தெரிவித்துள்ள அமைச்சர் மா.சுப்பிரமணியன், தேசிய மருத்துவ ஆணையம் அனுப்பிய நோட்டீஸ் திரும்பப் பெறப்பட்டுள்ளதாகவும் கூறினார்.