பாகிஸ்தான் கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த 7 மீனவர்களை உள்ளிட்ட 14 இந்திய மீனவர்களையும், அவர்களது படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வெளியுறவுத்துறை அமைச்சருக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
மீனவர்கள் கைது விவகாரம் தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் ஒன்ற எழுதியுள்ளார். அதில் குஜராத்தின் போர்பந்தரில் இருந்து கடந்த ஜனவரி 3ஆம் தேதி மீன் பிடிக்கச் சென்றபோது பாகிஸ்தான் கடற்படையினரால் 7 தமிழ்நாட்டு மீனவர்கள் உள்ளடக்கிய 14 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மீனவர்கள் கைது செய்யப்பட்டு 10 மாதங்கள் முடிவடைந்துள்ள நிலையில், மீனவர்களின் தற்போதைய நிலை குறித்தோ, அவர்களை விடுவிப்பதற்கான முயற்சிகள் குறித்தோ எவ்விதத் தகவலும் இல்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். மேலும், மீனவர்களை விடுவிப்பது தொடர்பாக நீண்டகாலமாக நிச்சயமற்ற தன்மை நிலவுகிறதாகவும், பொருளீட்டும் மீனவர்கள் இல்லாததால் அவர்களை சார்ந்துள்ள குடும்ப உறுப்பினர்கள் மிகுந்த வேதனையுடன் உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்
பாகிஸ்தான் கடற்படையினரால் நீண்டகாலமாக சிறையிலடைக்கப்பட்டுள்ள நிலையில், மனிதாபிமான அடிப்படையில் அனைத்து மீனவர்களையும் அவர்களது மீன்பிடி இயந்திரப் படகுகளையும் விடுவிக்க உறுதியான தூதரக நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.