தமிழ்நாடு நூறு நாள் வேலைத்திட்டத்திற்கு வழங்க வேண்டிய ரூ.4,034 கோடியை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமுகவலைத்தளப் பதிவில் நூறு நாள் வேலைத் திட்டத்தில் பணியாற்றும் இலட்சக்கணக்கான கிராமப்புற மக்களுடன் தோளோடு தோள் நின்று தி.மு.கவினர் 1,600 இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளதாகவும், மத்திய பா.ஜ.க. அரசை நோக்கி “எங்கே எங்கள் பணம்?” என்ற வினாவை இடியென முழங்கி இருப்பதாவும் தெரிவித்துள்ளார்.
கொளுத்தும் வெயிலில் பாடுபட்டவர்களுக்குரிய கூலியை அளிப்பதற்கான நிதியைக் கூட மறுப்பது நிர்வாகத் தோல்வி மட்டுமல்ல, அவர்களைத் துன்புறுத்தும் செயலாகும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காட்டமாக தெரிவித்துள்ளார். அடுத்த வரைத் துன்புறுத்தி இன்பம் காணும் பா.ஜக. அரசு வேண்டுமென்றே நிதியை விடுவிக்காமல் தங்களைத் தேர்தலில் நிராகரித்த தமிழ்நாட்டு கிராமப்புற மக்களைத் தண்டிப்பதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழ்நாட்டிற்கு வழங்காமல் நிலுவையில் உள்ள மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்ட நிதி ரூ.4,034 கோடியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதள பதிவில் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார். மேலும், தமிழ்நாட்டு மக்களை அரசியல் ரீதியாகத் துன்புறுத்தி மகிழும் செயலை நிறுத்த வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.