வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
மத்திய கிழக்கு வங்கக்கடலில் நேற்று நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு வடமேற்கு நோக்கி நகர்ந்து இன்று காலை 5.30 மணியளவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஒடிசாவின் பாரதீப்-க்கு தென் கிழக்கே 730 கிலோ மீட்டர் தொலைவிலும், மேற்குவங்கத்தின் சாகர்தீவுக்கு தெற்கு தென்கிழக்கு 770 கிலோ மீட்டர் தொலைவிலும், வங்கதேசத்தின் கேபுபுராவிற்கு தெற்கு தென்கிழக்கு 740 கிலோமீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளதாக தெரிவித்துள்ள வானிலை மையம், இது தொடர்ந்து மேற்கு வடமேற்கு நோக்கி நகர்ந்து நாளை டானா புயலாக மத்திய கிழக்கு வங்க கடலில் வலுப்பெறும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
டானா புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து தீவிர புயலாக வடமேற்கு வங்கக்கடலில் பகுதியில் வரும் 24ஆம் தேதி காலை வலுப்பெறும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வடக்கு ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் பூரி மற்றும் சாகர் தீவுக்கு இடையே வரும் 24ஆம் தேதி இரவு மற்றும் 25ஆம் தேதி காலையில் 100 முதல் 120 கிலோ மீட்டர் வேகத்தில் கரையை கடக்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.