மாணவர் தற்கொலை – தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்
புதுக்கோட்டையில் மாணவர் தற்கொலை தொடர்பாக தலைமை ஆசிரியர் சிவப்பிரகாசம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
புதுக்கோட்டை தஞ்சை சாலையில் மச்சுவாடி அருகே உள்ள அரசு முன்மாதிரி மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்த விஜயபுரத்தை சேர்ந்த மாதேஸ்வரன் என்ற மாணவன் நேற்று பள்ளிக்குச் சென்ற நிலையில் முறையாக முடிவெட்ட வில்லை என ஆசிரியர்கள் அந்த மாணவனை கண்டித்ததோடு கடைக்கு சென்று முடிவெட்டி வருமாறு அனுப்பியதாக கூறப்படுகிறது.
நேற்று காலை 11.15 மணிக்கு பள்ளியை விட்டு சென்ற மாணவன், அதன் பின்பு மீண்டும் பள்ளிக்கு வராத நிலையில் ஆசிரியர்களும் அந்த தகவலை மாணவனின் குடும்பத்தினருக்கு முறையாக தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று மாலை வரை மாதேஸ்வரன் வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த அவரது பெற்றோர் பள்ளி ஆசிரியர்களை செல்போனில் தொடர்பு கொண்டு கேட்டபோது மாணவன் மாதேஸ்வரன் முறையாக தலைமுடியை வெட்டாதால் கடைக்கு சென்று முடி வெட்டி விட்டு வரும்படி கூறி காலை 11 மணிக்கு பள்ளியை விட்டு அனுப்பியதாக கூறியுள்ளனர்.
இதனையடுத்து மாணவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளிக்கு வந்து அந்த மாணவனை 3 மணி நேரத்திற்கு மேலாக தேடி உள்ளனர். அப்போதுதான் அந்த மாணவன் பள்ளி வளாகத்தின் அருகே உள்ள காட்டுப் பகுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட விவரம் தெரிய வந்தது. அதிக தலைமுடி, தாடியுடன் வந்த மாணவர் மாதேஸ்வரனை ஆசிரியர்கள் திட்டியதால் தற்கொலை செய்து கொண்டதாக உறவினர்கள் புகார் அளித்ததை அடுத்து அப்பள்ளி தலைமை ஆசிரியர் சிவப்பிரகாசம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.