‘புரட்சித்தமிழர்’ என்ற பெயர் தெரியாமலேயே ஈபிஎஸ்க்கு பட்டம் வழங்கிய மதுரை சாமியார்!
மதுரை வளையங்குளத்தில் ஆகஸ்ட் 20 ஆம் தேதி அதிமுகவின் 51-வது ஆண்டு மாநாடு நடைபெற்றது.
இந்த மாநாட்டில் எடப்பாடி பழனிச்சாமிக்கு சர்வ மதத்தை சேர்ந்தவர்கள் சார்பாக புரட்சி தமிழர் என்று பட்டம் வழங்கப்பட்டது. இனி எடப்பாடி பழனிச்சாமி புரட்சி தமிழர் என்ற பெயரில் தான் அழைக்க வேண்டும் என மாநாட்டில் தெரிவிக்கப்பட்டது. இந்த பட்டத்தை மதுரை நிலையூர் சேர்ந்த சுப்பிரமணிய சுவாமிகள், ஒரு பாதிரியார் உள்ளிட்ட மூன்று பேர் சேர்ந்து மேடையில் வைத்து வழங்கினார்கள்.
இதுகுறித்து பேட்டி அளித்த சுப்பிரமணிய சுவாமிகள், பொதுமக்கள் கேட்டு கொண்டதன் பேரிலேயே எடப்பாடி பழனிச்சாமிக்கு பட்டத்தை வழங்க ஒத்துக் கொண்டதாகவும் முதலில் தனியாக வர மறுத்து விட்டதாக தெரிவித்தார். சர்வ மதத்தை சேர்ந்தவர்கள் வருவதாக தெரிவித்த பின்னரே பட்டம் வழங்க ஒத்துக் கொண்டதாக தெரிவித்தார். மேடைக்கு சென்று பட்டம் வழங்கி விட்டு உடனடியாக திரும்பி விட்டதாக கூறிய அவர், புரட்சி தமிழர் என்ற பட்டம் வழங்கப்படுவது தெரியுமா என்ற கேள்விக்கு புரட்சி என்று தெரியும் ஆனால் அது புரட்சி தங்கமா புரட்சி புயலா புரட்சி தமிழனா என தனக்கு தெரியாது அதை நேரடியாக சென்று பார்த்த பின்பு தான் அது புரட்சி தமிழர் என்று தெரிய வந்ததாக கூறினார்.