கண்களுக்கு விருந்தளிக்கும் சூரியகாந்தி பூக்கள்
பெரம்பலூர் மாவட்டத்தில் சாலையோரம் சூரியகாந்தி பூக்கள் பூத்துக் குலுங்கி பார்ப்பவர்களின் கண்களுக்கு விருந்தளித்து வருகிறது.
ரஷ்யா உக்ரைன் போர் காரணமாக கடந்த ஆண்டு சூரியகாந்தி எண்ணெய் இறக்குமதி திடீரென நிறுத்தப்பட்டது. இதனால் சூரியகாந்தி வித்துக்களின் கொள்முதல் விலை ஏற்றம் கண்டது.
தேவையை கவனத்தில் கொண்ட விவசாயிகள் நடப்பாண்டு கம்பு, சோளம், கடலை போன்ற வழக்கமான சாகுபடியை கைவிட்டு பெரம்பலூரில் உள்ள 20 கிராமங்களில் கூடுதல் பரப்பளவுக்கு சூரியகாந்தி எண்ணெய் வித்துக்களை சாகுபடி செய்துள்ளனர்.
இந்நிலையில் செடி வளர்ந்து சூரியகாந்தி மலர்ந்து வருவதால் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை மஞ்சள் போர்வை போர்த்தியது போல ரம்மியமாக காட்சியளிக்கிறது.
இதனை காணும் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் பலர் சூரியகாந்தி தோட்டத்தில் இறங்கி செல்ஃபி எடுத்து மகிழ்கிறார்கள்.