இரண்டு கண்ணிலும் பார்வை இழந்த மாற்றுத்திறனாளி இளம் பெண்ணுக்கு வாழ்க்கை கொடுத்த வாலிபருக்கு குவியும் பாராட்டு,பாசப் போராட்டத்தில் சிக்கி தவித்த பெற்றோர்கள், நடப்பது நிஜமா? அல்லது கனவா என அனைவரின் மனதை உருக வைத்த கல்யாணம். கட்டிடத் தொழிலாளியின் மகளுக்கு தமிழக அரசின் சார்பில் தொகுப்பு வீடு, திருமண உதவித்தொகை வழங்கி உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனா்.அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே காவிரி நீர் பாயும் கொள்ளிடக்கரை அருகில், நாலாபுரமும் நெற்பயிர்கள் சூழ்ந்து பசுமையாக காட்சி தரும் விவசாய நிலங்கள் மத்தியில் சீனிவாசபுரம் என்னும் சிற்றூர் உள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்ற நிலையில், இந்த ஊரில் ரத்தினம் மகன் வீராச்சாமி (64வயது) என்பவர் கட்டிட கூலி தொழிலாளியாக இருந்து வருகிறார். இவர் மாற்றுத் திறனாளி பெண்ணான ராணி என்பவரை திருமணம் செய்து குடும்பத்துடன் வசித்து வந்தார். இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகளுக்கும் மேல் குழந்தை பாக்கியம் இல்லாமல் வேதனைப்பட்டு வந்தார். பல இடங்களில் மருத்துவம் பார்த்தும் அவருக்கு குழந்தை பாக்கியம் கிட்டவில்லை. இதில் மனம் உடைந்த வீராச்சாமி தம்பதிகள் போகாத கோயில்கள் இல்லை.
காலம் செல்ல செல்ல ஒரு நாள் இவரது வேண்டுதல் பலித்தது. ஆம்! இவருக்கு பெண் குழந்தை பிறந்தது. மகிழ்ச்சியில் இருந்த வீராச்சாமி தம்பதியின் சந்தோசம் 6 மாதமே நீடித்தது. ஆம்! பிறந்த அந்த பெண் குழந்தைக்கு பிறவியிலேயே இரு கண்ணும் பார்வை இழந்து விட்டதாகவும், அவருக்கு மீண்டும் பார்வை கொடுக்க முடியாது எனவும் மருத்துவர்கள் கூறிவிட்டனர். இதைக் கேட்ட வீராச்சாமி தம்பதியினர் நிலைகுலைந்து போனர். ஒருபுறம் அவரது மனைவி கால்கள் பலமிழந்து மாற்றுத் திறனாளியாக இருந்து வருகிறார். தற்போது பார்வையே இல்லாத இந்தப் பெண்ணை எப்படி வளர்த்து ஆளாக்குவது என தவித்தார் வீராசாமி.
ஒரு கட்டத்தில் தனது மனைவி ஊக்கம் கொடுக்க நாம் எப்படியாவது இந்த குழந்தையை சீராட்டி, பாலூட்டி வளர்த்து ஆளாக்க வேண்டும் என வீராச்சாமிக்கு ஆறுதல் கூறி அப்பெண் மனம் நோகாதபடி வளர்த்து வந்தனர் இருவரும். அந்தப் பெண்ணுக்கு சத்யா என பெயரிட்டு வளர்த்தனர். தற்போது 27 வயதாகும் அவருக்கு திருமண வயதை எட்டி விட்டதால் அவருக்கு எப்படியாவது திருமணத்தை நடத்தி வைத்து விட வேண்டும் என்பது இவர்களின் வாழ்நாள் கனவாக இருந்து வந்தது. அதேபோன்று சத்யாவும் தனது வீட்டில் தாய் தந்தைக்கு தேவையான அனைத்து சமையல் உதவிகள் செய்வதும், தன்னுடைய தேவைகளை தானே பூர்த்தி செய்வதும், அபார நினைவாற்றலை ஒருங்கே பெற்றிருந்தார் என்பது அவருடைய தனிச்சிறப்பு.
இப்படி வாழ்க்கை என்னும் இருள் சூழ்ந்த படகில் பயணம் செய்த சத்யாவின் வாழ்க்கைக்கு தற்போது ஒளி பிறந்துள்ளது. ஆம்! சத்யாவை திருமணம் செய்து அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் வாழ்க்கைக்கு கொடுத்து வாழ்நாள் ஒளியாக இருப்பேன் என்று வாலிபர் ஒருவர் தியாகம் செய்திருக்கிறார். ஆம்! கடலூர் மாவட்டம் நாச்சியார் பேட்டை கிராமத்தைச் சேர்ந்த மதிஒளி(41). இவர் ஸ்ரீமுஷ்ணத்தில் ஒரு தனியார் பாத்திர கடையில் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு தாய், தந்தை இல்லை. தனியாகத்தான் வசித்து வந்தார். இதனிடையே பல ஆண்டுகளாக திருமணம் செய்யாமல் தனியாக வாழ்ந்து வந்த அவர், மாற்றுத்திறனாளி பெண்ணான சத்யாவின் வாழ்க்கை நிலை குறித்து உறவினர் மூலம் கேட்டறிந்தார்.
பின்னர் தனது கடையின் உரிமையாளர் முத்துராமலிங்கம் என்பவரிடம் கேட்டு தான் ஒரு மாற்றுத்திறனாளிப் பெண்ணை திருமணம் செய்து அவருக்கு வாழ்க்கை கொடுக்கப் போவதாக கூறினார். முதலில் இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர் பின்னர் மதி ஒளியின் தியாக மனப்பான்மையை எண்ணி வியந்தார். இதையடுத்து முத்துராமலிங்கம் மதிஒளியை அழைத்துக்கொண்டு சத்யாவின் வீட்டிற்கு சென்று திருமணத்தை பேசி முடித்தார். திருமண ஏற்பாடுகளை அவரே செய்வதாக இரு தரப்பினரும் முடிவு செய்தனர். அதன்படி தா.பழூர் திரவுபதி அம்மன் கோவிலில் எளிமையாக திருமணம் நடைபெற்றது. உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வந்திருந்து மணமக்களை வாழ்த்தினர்.
அப்போது திருமணத்திற்கு வந்திருந்த அனைவரும் ஆனந்த கண்ணீர் வடித்தனர். நடப்பது கனவா? அல்லது நிஜமா என சத்யாவின் பெற்றோர்கள் பாசப் போராட்டத்தில் தவித்தது காண்போரின் மனதை உருகச் செய்தது. அதேபோன்று சத்யாவிற்கு வாழ்க்கை கொடுத்த மதி ஒளி பேரில் மட்டும் ஒளி கொடுக்கவில்லை. வாழ்க்கைக்கும் ஒளி கொடுத்துள்ளார் என்று அவரது தியாக மனப்பான்மையை எண்ணி வியந்து அனைவரும் பாராட்டினர்.
பின்னர் இதுகுறித்து சத்யா தெரிவிக்கையில் – உலகத்தில் மனிதனாகப் பிறந்த அனைவரும் ஏதோ ஒரு வகையில் குறைகள் இருக்கத்தான் செய்கிறது. ஆனாலும் எங்களைப் போன்ற மாற்றுத் திறனாளிகள் எதையும் குறையாக எடுத்துக் கொள்வதில்லை. குறையாக எடுத்துக் கொண்டால் வாழ முடியாது. எனக்கு பார்வை இல்லை என்றாலும் என்னுடைய தேவைகளை நானே பூர்த்தி செய்வேன். வீட்டில் சமையல் செய்வேன் காய்கறிகள் நறுக்கி அனைத்து வேலைகளையும் செய்வேன். என்னுடைய கணவருக்கும் சமைத்து அவரை உற்சாகப்படுத்துவேன். எங்களுக்கு அரசாங்கம் திருமண உதவித்தொகை மற்றும் தொகுப்பு வீடு வழங்கினால் எங்கள் வாழ்க்கை மேம்படுவதற்கு ஒரு வாய்ப்பாக அமையும் எனவே அரசு எங்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்றார்.
இதுகுறித்து அவரது கணவர் மதி ஒளி தெரிவிக்கையில் – தாய் தந்தை இல்லை. வீட்டில் தனியாகத்தான் வசித்து வருகிறேன். நீண்ட நாட்களாக திருமணம் கைகூடவில்லை. இதனால் மனவேதனையில் இருந்தேன். இதனிடையே சத்யாவின் நிலை குறித்து என் மனம் மிகவும் பாதித்தது. அவருக்கு வாழ்க்கை கொடுத்து அவரது வாழ்வில் ஒளி ஏற்ற வேண்டும் என என் மனதில் பட்டது. இது இறைவன் எனக்கு கொடுத்த வாய்ப்பாக நான் கருதுகிறேன். சத்யாவின் குடும்பத்திற்கு நல்ல மகனாவும் மருமகனாகவும் இருப்பேன் என்றார். மேலும் கூலி வேலை செய்துதான் குடும்பம் நடத்த வேண்டும். எங்களுக்கு அரசு தரப்பில் தொகுப்பு வீடு மற்றும் திருமண உதவித்தொகை வழங்கினால் எங்கள் வாழ்க்கை மேலும் பிரகாசமாக இருக்கும் என்றார்.
சத்யாவின் பெற்றோர்கள் தெரிவிக்கையில் – எங்கள் குடும்பம் மிகவும் வறுமையில் வாடுகிறது. இந்த திருமணத்தை எப்படியோ கடினப்பட்டு நடத்தி விட்டோம். பார்வையே இல்லாத என் மகளை திருமணம் செய்த மருமகன் எங்களுக்கு நல்ல மகனாக இருப்பார். அவரும் கூலி வேலை செய்து தான் எங்கள் குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என்பதால் அரசு தரப்பில் எங்களுக்கு திருமண உதவித்தொகை தொகுப்பு வீடு மேலும் தன்னார்வலர்கள் உதவி செய்தால் எங்கள் குடும்பம் மேம்படும் என்று கண்ணீர் மல்க தெரிவித்தார்.