தமிழ்நாட்டு மீனவர்களை மொட்டையடித்து அனுப்பிய இலங்கை அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வரும் 20ம் தேதி ராமேஸ்வரத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டு மீனவர்களை கைதுசெய்தும், உடைமைகளை முடக்கியும் அச்சுறுத்தி வரும் இலங்கை கடற்படையின் அட்டூழியம் தற்போது மீனவர்களை மொட்டையடித்து அவமதிக்கும் அநாகரீக எல்லைக்குச் சென்றுள்ளது. இலங்கை கடற்படையின் இந்த அராஜகப்போக்கை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.
தமிழ்நாட்டு மீனவர்களை கடல் எல்லையில் கைது செய்து துன்புறுத்துவதை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். படகுகளை சுற்றி வளைத்து அச்சுறுத்துவது, நாட்டுப் படகுகளையும் கூட கைப்பற்றி வழக்குப் போடுவது, மீனவர்களை கைது செய்து துன்புறுத்துவது, நடுக்கடலில் மோதலுக்கு முயல்வது என பல வகையான முயற்சிகளை இலங்கை கடற்படையினர் அவ்வப்போது செய்து வருகின்றனர். இதுபோன்ற நிகழ்வுகளில் கடந்த ஜூலை மாதத்தில் இருந்து நூற்றைம்பது மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ரோந்து கப்பல் மோதலில் ஒரு மீனவர் பலியாகியுள்ளார்.
இவ்வாறான சமயங்களில் இந்திய அரசாங்கத்தின் தரப்பில் இருந்து உரிய எச்சரிக்கை, கண்டனக் குரல்கள் எழ வேண்டுமென பலமுறை வற்புறுத்தியுள்ளோம். ஆனால், மோடி அரசாங்கத்தின் அணுகுமுறை, மீனவர்களின் பிரச்சனையை புறக்கணிப்பதாகவே இருந்து வருகிறது. ராஜதந்திர அடிப்படையிலான தலையீடுகள் இல்லாததால் மீனவர்கள் துன்புறுத்தப்படுவதும், பொருட் சேதத்திற்கு ஆளாவதும் தொடர்கதையாக உள்ளது.
இப்படிப்பட்ட சூழலில்தான் அண்மையில் கைதுசெய்த தமிழ்நாட்டு மீனவர்கள் சேது, அடைக்கலம், கணேசன் ஆகியோரின் மீது வழக்குப் போட்டுள்ள இலங்கை அரசாங்கம் அவர்களுக்கு 6 மாத சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதித்ததுடன், அதனை செலுத்தவில்லை என்று கூறி மொட்டையடித்து, கைதிகள் பயன்படுத்தும் கழிவறைகளை சுத்தம் செய்ய வைத்து அவமதித்துள்ளனர். தமிழ்நாட்டு மீனவர்களின் சுயமரியாதையைச் சீண்டும் இலங்கை கடற்படையினரின் இந்த இழிவான அராஜகப் போக்கினை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.
இலங்கை அரசையும், தமிழ்நாட்டு மீனவர்களின் பிரச்சனையில் பாராமுகமாக உள்ள மோடி அரசாங்கத்தின் அலட்சியப் போக்கைக் கண்டித்தும் வரும் செப். 20 அன்று ராமேஸ்வரத்தில், சி.பி.எம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இந்தப் போராட்டத்திற்கு கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமையேற்கிறார். இந்த ஆர்ப்பாட்டத்தில் ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை ஆகிய கடலோர மாவட்டங்களைச் சேர்ந்த தலைவர்களும் பங்கேற்கவுள்ளனர். இதில் மீனவர்களும், பொதுமக்களும் திரளாக கலந்துகொண்டு கண்டனக் குரல் எழுப்ப வேண்டுமென சி.பி.எம் சார்பில் அறைகூவி அழைக்கிறோம், இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.