கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றியதை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கடந்த ஜுன் மாதம் மெத்தனால் கலந்த விஷச்சாராயம் குடித்து 70-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. அதேவேளையில் விஷ சாராயம் மரணம் தொடர்பான வழக்கை காவல்துறை விசாரித்தால் நியாயமாக இருக்காது என்றும், அதனால் சி.பி.ஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் அ.தி.மு.க., பா.ம.க., பா.ஜ.க. வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் தனித்தனியாக வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்குகளை விசாரித்த் உயர்நீதிமன்ற நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், பி.பி.பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வு, கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கை சிபிஐக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டனர். மேலும் இந்த வழக்கை சிஐபி அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.
இந்த நிலையில், கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றியதை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது. அந்த மேல்மேறையீட்டு மனுவில், சி.பி.ஐ வசம் வழக்கை ஒப்படைத்தால் அதன் விசாரணை முடிய காலதாமதம் ஆகும் என்றும், எனவே தமிழ்நாடு காவல்துறையே விசாரணையை தொடர்ந்து நடத்த அனுமதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசு தனது மனுவில் கோரிக்கை வைத்துள்ளது.