போதை பொருள் கடத்தல் குற்றவாளிகள் மீது மத்திய, மாநில அரசு காவல்துறை அதிகாரிகள் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-, ஓரிரு நாட்களுக்கு முன்பு சென்னை துறைமுகத்தில் 110 கோடி ரூபாய் மதிப்புள்ள 112 கிலோ சூடோ எபிப்ரீன் என்ற போதைப் பொருளை மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர் என்ற செய்திகள் ஊடகங்களில் வந்துள்ளன. ஆஸ்திரேலியாவுக்கு செல்ல இருந்த சரக்கு பெட்டகம் ஒன்றை சோதனை செய்ததில் போதை பொருள் சிக்கியதாகவும், இந்த போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.
போதைப் பொருட்களின் கேந்திரமாக தமிழகம் மாற்றப்பட்டுள்ளதற்கு காரணகர்த்தாக்கள் யார் ? சூத்ரதாரிகள் யார்- யார் ? என்பது நன்கு தெரிந்திருந்தும், ஆணிவேர் எங்கிருக்கிறது என்று தெரிந்திருந்தும், அவர்கள் மீது சட்டத்தின் இரும்புப்பிடி நீளாமல், கடத்தலில் ஈடுபடும், குருவிகள் என்றழைக்கப்படும், சிறு சிறு கடத்தல் வேலை செய்யும் ஒருசிலரை மட்டும் மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினர் பிடிக்கும் மர்மம் என்ன? என்று மக்கள் குழம்பி போய் உள்ளனர்.
இனியாவது ஸ்டாலினின் திமுக அரசு, தமிழக இளைஞர்களின் நலனை கருத்தில் கொண்டு காவல்துறை அதிகாரிகளுக்கு முழு சுதந்திரம் வழங்கி, தனிப்பட்ட ஆதாயங்களுக்காக சமுக விரோத சக்திகளை ஊக்குவிக்கும் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும், இனி தமிழகத்தில் போதைப் பொருள் நடமாட்டத்தை அடியோடு தடுக்க அரசியல் தலையிடு இன்றி சட்டப்படி கடும் நடவடிக்கைகள் எடுக்கவும், தமிழகத்தில் இருந்து வெளி மாநிலங்கள், மற்றும் வெளிநாடுகளுக்கு கடத்தப்படும் போதை பொருட்களின் ஆணி வேரை கண்டறிந்து அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
தொடர்ந்து இதுபோன்ற போதைப் பொருள் கடத்தல், விற்பனை தொடர்ந்தால், தமிழக இளைஞர்கள் மட்டுமல்ல, இந்தியாவின் எதிர்காலமே பாழாகும் என்பதை நினைவில் நிறுத்தி போதைப் பொருள் கடத்தல் குற்றவாளிகள் மீது சம்பந்தப்பட்ட மத்திய, மாநில காவல்துறை அதிகாரிகள் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன், இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.