இந்தியாவிலேயே ஆவணங்களை காப்பதில் தமிழ்நாடு தான் முதன்மை மாநிலமாக உள்ளதாக உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
சென்னை எழும்பூரில் உள்ள ஆவணக் காப்பகத்தை உயிர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து அங்கு இருக்கும் அதிகாரிகளிடம் ஆவண காப்பாதத்தின் பணிகள் குறித்து கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் கோவி.செழியன், உயர் கல்வித் துறையின் அங்கமாக இருக்கின்ற ஆவண காப்பகத்தை ஆய்வு செய்துள்ளதாகவும், ஆவணக்காப்பகத்தில் செய்துள்ள பணிகள், செய்ய வேண்டிய பணிகளை திடீர் களஆய்வு செய்துள்ளதாகவும் தெரிவித்தார். இங்கே இருக்கின்ற ஆவணங்களை பார்க்கும்பொழுது மிகவும் பிரமிப்பாக உள்ளதாகவும், இந்தியா பழமை வாய்ந்த நாடு அதனை தலைமை தாங்கும் தகுதி தமிழ்நாட்டிற்கு உள்ளது என்றும் அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்தார் .
இந்த கட்டிடம் 1909-ஆம் ஆண்டு கட்டப்பட்டதாக குறிப்பிட்ட அவர், இத்தனை ஆண்டுகள் கடந்து ஒரு ஆவண காப்பகம் நிலைத்திருக்கின்றது என்பதற்கு இந்த கட்டடம் ஒரு சான்று என்றும் தெரிவித்தார். இந்தியாவிலேயே ஆவணங்களை காப்பதில் தமிழ்நாடுதான் முதன்மை மாநிலமாக உள்ளதாகவும், இங்கு 1670-ஆம் ஆவணங்கள் முதல் பாதுகாக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் கோவி.செழியன் கூறினார். இங்கு 40 கோடி ஆவணங்கள் உள்ளதாகவும், 1973-ஆம் ஆண்டு முத்தமிழறிஞர் கலைஞர் முதல்வராக இருக்கும்போதுதான் ஆவண காப்பகத்தில் வரலாற்று பேரவை என்ற அமைப்பை உருவாக்கினார் என்றும், ஆவணங்களை காப்பதற்கு முதல் முயற்சியை முத்தமிழறிஞர் கலைஞர் எடுத்ததாகவும் அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்தார். மேலும், அதனை மீண்டும் திராவிட மாடல் முதலமைச்சர் செயல்படுத்தி வருவதாகவும் பெருமிதம் தெரிவித்தார்.
கடந்த 2007ஆம் ஆண்டு கலைஞர் ஆட்சிக்காலத்தில் இந்த ஆவண காப்பகத்தை பாதுகாக்க ரூ.5 கோடி ஒதுக்கியதாகவும், அதற்கு பின்னே வந்த ஆட்சியாளர்கள் ஆவண காப்பகத்தை பாதுகாக்க எந்த நிதியும் ஒதுக்கவில்லை என்றும் அமைச்சர் குற்றம்சாட்டினார். கடந்த 2007க்கு பிறகு திராவிட மாடல் முதலமைச்சர் 10 கோடி ரூபாய் ஆவணங்களை பாதுகாப்பதற்கும், 10 கோடி ரூபாய் கட்டடங்கள் கட்டுவதற்கும் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார் என சுட்டிக்காட்டிய அமைச்சர், ஆவணக் காப்பகத்தின் பெருமையை உணர்த்தும் வகையில் கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட தீர்ப்பு (judgement copy) உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் இங்கு பாதுகாப்பான முறையில் பாதுகாக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
இந்த ஆவணங்கள் இன்னும் பல ஆண்டுகளுக்கு நீடித்து நிலைக்கின்ற நிலை உருவாகுவதற்கு நாங்களும் முயற்சி எடுப்போம். அதில் வெற்றியும் காண்போம் என்றும் கூறிய அமைச்சர் கோவி.செழியன், இதுவரை 5 லட்சம் ஆவணங்கள் புதுப்பிக்கப்பட்டு உள்ளதாகவும், மேலும் பல ஆவணங்கள் புதுப்பிக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், இந்த இடத்தை சுற்றுலாத்துறையுடன் கலந்து பேசி மாணவர்கள் பார்வையிட எதிர்கால நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்தார்.