தமிழக சட்டமன்ற கூட்டம் வரும் 9 மற்றும் 10 என இரண்டு நாட்கள் நடத்தப்படும் என அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
மேலும் கூட்டத் தொடர் முதல் நாளில் மதுரையில் சுரங்கம் தோண்ட அனுமதி அளித்த மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்படும் என சபாநாயகர் அறிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடத்துவது தொடர்பான அலுவல் ஆய்வு குழு கூட்டம் சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் அமைச்சர் துரைமுருகன், அரசு கொறாடா ராமச்சந்திரன், துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, காங்கிரஸ் சட்டமன்ற கட்சித் தலைவர் ராஜேஷ்குமார், அதிமுக கொறடா வேலுமணி, ஆர் பி உதயகுமார், சிபிஎம் நாகை மாலி, கம்யூனிஸ்ட் தளி ராமச்சந்திரன், பா.ம.க சட்டமன்ற குழு தலைவர் ஜி.கே.மணி, விசிக சிந்தனை செல்வன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அலுவல் ஆய்வு குழு கூட்டம் பிறகு செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் அப்பாவு, சட்டமன்ற கூட்டத்தொடர் இரண்டு நாட்கள் நடத்துவது என்றும், முதல் நாளில் மதுரை மாவட்டத்தில் சுரங்கம் தோண்ட மத்திய அரசு அனுமதி அளித்ததற்கு எதிராக சிறப்பு தீர்மானம் நிறைவேற்ற திட்டமிட்டு இருப்பதாக தெரிவித்தார். மேலும் இரண்டாவது நாள் சட்டமன்ற உறுப்பினர்கள் விவாதம் நடைபெறும் எனவும் சபாநாயகர் தெரிவித்தார்.
அதன் பின்னர் அதிமுக கட்சி சார்பாக கொறாடா எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களிடம் பேசியபோது, அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில் எதிர்க் கட்சிகளுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் எனவும் அதிக நாட்கள் நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்தாக கூறினார். மேலும் ஆண்டுக்கு நூறு நாட்கள் கூட்டம் நடத்துவோம் என திமுக சொல்லியது, ஆனால் தற்போது அப்படி இல்லை என்றார். மழை, புயல் பாதிப்பு பற்றி பேச வேண்டும் என ஆய்வு கூட்டத்தில் வலியுறுத்தியதாகவும் கூறினார். மேலும் மூன்று ஆண்டுகள் ஆன நிலையில் சட்டமன்ற உறுப்பினர்கள் பேச போதிய வாய்ப்பு அளிக்கவில்லை என்றும், இந்தக் கூட்டத் தொடரில் பத்து நாட்கள் நடத்த வேண்டும் என வலியுறுத்தியதாக கூறினார்.
சொத்து வரி தொடர்பாக எதிர்ப்பு தெரிவித்தோம். அதிமுக ஆட்சியில் உயர்த்தவில்லை எனவும், திமுக ஆட்சியில் நூறு சதவீதம் வரை சொத்து வரியை உயர்த்தியது மக்களுக்கு பாதிப்பு என தெரிவித்தார்.