சனாதனம் உதயநிதி குறித்து பேசுவதை நிறுத்தி கொள்ள வேண்டும்- தமிழிசை
மகாகவி பாரதியாரின் நினைவு நாளை முன்னிட்டு சென்னை, மெரினா கடற்கரையில் உள்ள அவரது திருவுருவச்சிலைக்கு, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சவுந்தரராஜன், “ஆயிரமாவது குடமுழுக்கு என்று அமைச்சர் சேகர்பாபுவை பாராட்டும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இதுவரை எத்தனை குடமுழுக்கு நிகழ்வில் கலந்துகொண்டுள்ளார்? ஒரே ஒரு குடமுழுக்கு விழாவில் கூட கலந்துகொள்ள நேரம் இல்லையா? ஒவ்வொரு கோயிலுக்கும் ஒரு வழிமுறை இருக்கிறது. வழிமுறைகளை நாம் பின்பற்றி தான் ஆக வேண்டும். உண்மையில் சமத்துவ சமுதாயத்தை பிரதமர் மோடி தான் படைத்துக் கொண்டிருக்கிறார்.
கோயில்களில் உள்ள சில வழிமுறைகளை நாம் பின்பற்றிதான் ஆகவேண்டும். இல்லாத பிரச்சனையை எடுத்துக்கொண்டு தம்பி உதயநிதி பேசுவது சரியல்ல. உதயநிதி ஸ்டாலின் சனாதனம் குறித்து பேசுவதை நிறுத்தி கொள்ள வேண்டும். பல தலைவர்கள் இதற்காக போராடி இருக்கிறார்கள். ஜோ பைடனுக்கு கைகுலுக்க தெரிந்த முதலமைச்சருக்கு பாரதியாருக்கு அஞ்சலி செலுத்த நேரமில்லையா?. சனாதனத்தை எதிர்க்கும் ஆ.ராசாவால் திமுக தலைவராக முடியுமா?” எனக் கேள்வி எழுப்பினார்.