தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தனது பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டுகள் சிறைத்தண்டனையை எதிர்த்து முன்னாள் அமைச்சர் பொன்முடி டெல்லியில் உள்ள உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டுகள் சிறைத்தண்டனையை நிறுத்தி வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. சொத்து குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு வழங்கப்பட்ட தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டதை அடுத்து, அவர் மீண்டும் எம்.எல்.ஏல் ஆக தகுதிபெற்றார். இதனையடுத்து அவரை மீண்டும் அமைச்சராக்க திமுக அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக ஆளுநருக்கு கடிதம் அனுப்பப்பட்ட நிலையில், ஆளுநர் பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க மறுத்துவிட்டார்.
இந்த நிலையில், பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க மறுத்த ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் பதவிபிரமாணம் செய்து வைக்க உத்தரவிட்டது. இருப்பினும் ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைக்க மறுத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்த பிறகும் பொன்முடிக்கு பதவியேற்பு நடத்தி வைக்க ஆளுநர் மறுப்பது ஏன்? என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது நீதிமன்ற உத்தரவை மீறி எவ்வாறு பதவிப்பிரமாணம் செய்ய முடியாது எனக் கூறமுடியும் என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், ஆளுநர் மீது நடவடிக்கை எடுக்க நேரிடும் என எச்சரித்தனர். ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல் அரசியல் சாசன விதிமீறல் எனவும் கூறினர். நாளைக்குள் ஆளுநர் தரப்பில் பதில் அளிக்க வேண்டும் இல்லாவிட்டால் உச்சநீதிமன்றம் உரிய உத்தரவுகளை பிறப்பிக்கும் என எச்சரித்தனர்.
இந்த நிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தனது பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பின்பும் ஆளுநர் ஆர்.என்.ரவி அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க மறுப்பு தெரிவித்து வருகிறார். இந்த நிலையில், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி பொன்முடிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் முன்வராததால் அவர் பதவி விலகுவது பற்றி ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.