தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் வி.திருவள்ளுவனை சஸ்பெண்ட் செய்து ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார்.
முந்தய அ.தி.மு.க ஆட்சியின்போது தமிழ் பல்கலைகழக துணை வேந்தராக பணியாற்றிய பாஸ்கரன், பேராசிரியர்கள், துணை பேராசிரியர், உதவி பேராசிரியர் என 40 பணியிடங்களை உரிய கல்வி தகுதி இல்லாதவர்களிடம் பணம் பெற்றுகொண்டு பணியில் அமர்த்தியதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக கடந்த 2019ம் ஆண்டு லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், உரிய தகுதி இல்லாத அந்த 40 பேர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று ஆளுநர் மாளிகையில் இருந்து துணைவேந்தர் வி. திருவள்ளுவனிடம் இருமுறை விளக்கம் கேட்டதாகவும், அதற்கு வி.திருவள்ளுவன் முறையான பதிலை தராமல் காலம் கடத்தியதாகவும் கூறப்படுகிறது.
இதன் காரணமாக துணைவேந்தர் வி.திருவள்ளுவனை சஸ்பெண்ட் செய்து, ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பான உத்தரவை ஆளுநரின் செயலாளர் கிர்லோஸ் குமார், தமிழ்ப் பல்கலைகழக பதிவாளர் தியாகராஜனுக்கு அனுப்பியுள்ளார். துணை வேந்தர் திருவள்ளுவனின் பதவிக்காலம் வரும் டிசம்பர் 12ஆம் தேதியுடன் நிறைவடையும் நிலையில், அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.