Homeசெய்திகள்தமிழ்நாடுமாநிலங்களுக்கான வரிப் பகிர்வை 50 சதவீதமாக உயர்த்த வேண்டும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

மாநிலங்களுக்கான வரிப் பகிர்வை 50 சதவீதமாக உயர்த்த வேண்டும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

-

மத்திய வருவாயில் மாநிலங்களுக்கான வரிப் பகிர்வின் பங்கு 50 விழுக்காடு உயர்த்தப்பட வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற 16-வது மத்திய நிதிக்குழு கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை, நிதிக்குழு தலைவர் அரவிந்த் பனகாரியாவிடம் வழங்கினார். முன்னதாக இந்த கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:- சுகாதாரம், கல்வி, சமூகநலம் மற்றும் வேளாண்மை போன்ற துறைகளின் முன்னேற்றத்திற்கான பல முக்கியமான திட்டங்களை வடிவமைத்து நடைமுறைப்படுத்துவதற்கான பொறுப்புகளை பெரும்பாலும் மாநில அரசுகள் தான் நிறைவேற்றி வருகின்றன என்பதை நாம் அனைவரும் அறிவோம்.  ஆனால், அதற்கு மாறாக இந்த பொறுப்புகளை எல்லாம் நிறைவேற்றத் தேவையான வருவாயைப் பெருக்குவதற்கான அதிகாரங்கள் மாநில அரசுகளிடம் குறைவாகவே உள்ளன.

கடந்த 15-வது நிதிக்குழுவின் பரிந்துரைகளின்படி மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்ககூடிய வரி வருவாய்ப் பங்கினை 41 விழுக்காடாக உயர்த்தியபோதும், இந்த பரிந்துரைக்குமாறாக கடந்த 4 ஆண்டுகளில் மத்திய அரசின் மொத்த வரி வருவாயில் 33.16 விழுக்காடு மட்டுமே மாநிலங்களுக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டிருக்கிறது. மாநிலங்களுக்கான வரிப் பகிர்வில் இடம்பெற்றிருக்கும் மேல்வரி மற்றும் கூடுதல் கட்டணம் ஆகியவற்றை மத்திய அரசு இக்காலகட்டத்தில் பெருமளவு உயர்த்தியதே இதற்கு முக்கிய காரணம் ஆகும். இதுமட்டுமின்றி ஒன்றிய அரசும் மாநில அரசுகளும் இணைந்து செயல் படுத்திடும் திட்டங்களுக்கான மாநில அரசின் பங்குத்தொகை தொடர்ந்து உயர்ந்து வருவதும் தமிழ்நாடு போன்ற மாநிலங்களின் நிதிநிலையை மேலும் பாதிக்கின்றது.

ஒருபுறம் ஒன்றிய அரசிடமிருந்து வரவேண்டிய வரிப் பகிர்வு குறைவதால் மாநில அரசுகளுக்கு ஏற்படும் பாதிப்புகள், மறுபுறம் ஒன்றியஅரசு அறிமுகப்படுத்தும் திட்டங்களுக்கு மாநில அரசு செலவிடும் அதிக நிதி என இரண்டுமே மாநில
அரசுகளுக்குப் பெரும் சுமையை ஏற்படுத்துகின்றன. எனவே, மத்திய வருவாயில் மாநிலங்களுக்கான வரிப் பகிர்வின் பங்கு 50 விழுக்காடு உயர்த்தப்படுவதுதான் முறையானதாகவும், அனைவருக்கும ஏற்புடையதாகவும் இருக்கும் என்று நம்புகிறோம்.  இவ்வாறு 50 விழுக்காடு பங்கீடு  வழங்கப்பட்டால் மட்டுமே மாநிலங்கள் தங்களுடைய தேவைகளுக்கேற்ப வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தி நிதி மேலாண்மையில் உரிய சுயாட்சியுடன் செயல்பட இயலும்.

மாநிலங்களுக்கு இடையேயான வரிப்பகிர்வினை முறைபடுத்துவதில் சமச்சீரான அணுகுமுறை தேவைப்படுகிறது. 9-வது நிதிக் குழு பரிந்துரைத்த 7.831 சதவீதத்திலிருந்து கடந்த 15-வது நிதித் குழுபரிந்துரைப்படி 4.079 சதவீதமாக தமிழ்நாட்டிற்கான வரி பகிர்வு தொடர்ந்து வீழ்ச்சியை சந்தித்து வந்துள்ளது. நாட்டிற்கே வழிகாட்டும் வகையில் பல முன்னோடி நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தி, செம்மையான நிர்வாகத்தை தொடர்ந்து நல்கி வரும் தமிழ்நாட்டின் முன்னேற்றத்தை தொய்வடையச் செய்து தண்டிப்பதைப் போல தற்போதைய வரிப் பகிர்வு முறை அமைந்துள்ளது என்பதை நான் சுட்டிக் காட்ட வேண்டிய நிலையில் இருக்கிறேன்.

இந்நிலையில், தமிழ்நாடு சந்தித்து வரும் 3 குறிப்பிடத்தக்க சவால்களை நிதிக் குழுவின் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன். கடந்த சில ஆண்டுகளாக, இயற்கைப் பேரிடர்களின் தாக்கத்தினால் தமிழ்நாடு பெரும் பேரிழவினை சந்தித்து வருகிறது. இயற்கைப் பேரிழிவுகளினால் ஏற்படும் இழப்புகளை சரி செய்வதற்கு பெரும் அளவிலான நிதி மாநில அரசால் செலவிடப்பட வேண்டிய தேவை உள்ளதால், வழக்கமான வளர்ச்சித் திட்டங்களுக்கு  உரிய நிதி ஒதுக்க முடியாத சூழல் ஏற்படுகிறது. எனவே இத்தகைய பேரிடர் துயர் தணிப்பு பணி  மற்றும் மறு சீரமைப்பு நடவடிக்கைகளை மாநிலங்கள் உடனுக்குடன் மேற்கொள்ளும் வகையில் உரிய நிதியை வழங்கிட நிதிக்குழு பரிந்துரைக்க வேண்டுமென்று நான் கேட்டுக்
கொள்கிறேன்.

அடுத்து, தமிழ்நாட்டில் அதிகமாக வளர்ந்துவரும் முதியவர்களின் எண்ணிக்கை மற்றும்  மாநில மக்கள் தொகை அமைப்பில் ஏற்படும் மாற்றம் குறித்தும் நிதிக் குழுவின் கவனத்திற்கு கொண்டுவர விழைகிறேன். தற்போது தமிழ்நாட்டின் மக்கள் தொகையின் சராசரி வயது 36.4 ஆண்டுகள். இது உத்திரப்பிரதேச மாநிலத்தின் சராசரி அளவை விட 9.5 ஆண்டுகள் அதிகம். 16-வது நிதிக்குழுவின் பரிந்துரைக் காலம் முடிவடையும் பொழுது தமிழ்நாட்டின் சராசரி வயதானது 38.5 ஆண்டுகளாக இருக்கும். அதன்படி, நாட்டிலேயே வயதானவர்கள் அதிகம் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு உருவெடுக்கும்.

தமிழ்நாடு இதுவரை பெற்றுவந்துள்ள மக்கள்தொகை அடிப்படையிலான பயன் வேகமாகக் குறைந்து வருவதையும் சமூகப் பாதுகாப்புத் தேவைகள் அதிகரித்து வருவதையும் இது பிரதிபலிக்கிறது. அதிகரித்து வரும் முதியவர்களின் தேவைகளை நிறைவு செய்வதற்கு எதிர்வரும் 10 ஆண்டுகளில் தமிழ்நாடு, தேவையான பொருளாதார வளர்ச்சியினை அடைவதுடன் பல்வேறு துறைகளில் அதிக முதலீடுகளை உடனடியாக செய்ய வேண்டியுள்ளது.  அந்த முயற்சியை மேற்கொள்ளாவிடில் முன்னேறிய மாநிலமாக  மாறுவதற்கு முன்னால், முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக தமிழ்நாடு மாறிவிடும் அபாயத்தை இன்று சந்தித்து வருகிறது.  இந்த மிகமுக்கியமான கருத்தை நிதிக்குழு கவனத்தில் கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்வதுடன், இந்த சமூக முதலீடுகளுக்கு தேவையான நிதி ஆதாரத்தையும் தமிழ்நாட்டிற்கு வழங்கவேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

மூன்றாவதாக, நாட்டிலேயே அதிக நகரமயமாக்கலைச் சந்தித்து வரும் மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்கிறது. நகர்ப்புர கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதும்,  அதற்கான நிதி ஆதாரங்களை பெருக்குவதும் தமிழ்நாடு சந்தித்து வரும் ஒரு மிக முக்கியமான சவால்களில் ஒன்றாக இருக்கிறது. குறைவான நில வளம் மற்றும் நீர்
வளம் ஒருபுறம், தொடர்ந்து அதிகரித்து வரும் மக்கள் தொகை மறுபுறம் – இவற்றுக்கு இடையே சென்னை போன்ற நகரங்களில் வாழ்ந்திடும் மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளான குடிநீர், சுகாதாரம், சாலை வசதி மற்றும் தெரு விளக்குகள் அமைத்திடத் தேவையான முதலீடுகளைச் செய்திடவும் உள்ளாட்சி அமைப்புகளின் தரமான சேவைகளைத் தொடர்ந்து வழங்கிடவும், நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிக அளவிலான நிதி மற்றும் மானியங்களை வழங்கிட நிதிக்குழு பரிந்துரை செய்திட வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

 

 

MUST READ