தூளியில் விளையாடி கொண்டிருந்த சிறுவன் பலி
பொன்னேரி அருகே தூளியில் விளையாடி கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக கழுத்தில் சிக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த அத்திப்பட்டு இருளர் காலணியை சேர்ந்தவர் ராசையா (17). 10-ஆம் வகுப்பு வரை படித்து முடித்த ராசையா மேற்படிப்பிற்கு ஏதும் செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். இவர் வீட்டில் புடவையால் தூளி கட்டி விளையாடி உள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக கழுத்தில் சிக்கி இறுகியுள்ளது. இதில் ராசையா பேச்சு மூச்சின்றி மயங்கிய நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், உடனடியாக மீஞ்சூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த மீஞ்சூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.