ஓபிஎஸ் தாக்கல் செய்த வழக்கு 20ம் தேதிக்கு ஒத்திவைப்பு
அதிமுக வழக்கு விசாரணையை ஏப்ரல் 20 ஆம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.
அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் , பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க முடியாது என்ற தனி நீதிபதி குமரேஷ்பாபுவின் தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் இரு நீதிபதிகள் அமர்வு முன்பு மேல்முறையீடு வழக்குகள் தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்குகள் ஏற்கனவே நீதிபதிகள் மகாதேவன், முகமது ஷபிக் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது பிரதான வழக்கு மீது வரும் 20 ம்தேதி விசாரணை நடத்தப்படும் என நீதிபதிகள் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் அதிமுக செயற்குழு கூட்டம் வரும் 16-ம் தேதி நடைபெறுவதால் வழக்கை முன்கூட்டியே விசாரிக்கவேண்டும் என ஓபிஎஸ் தரப்பில் நேற்று முறையீடு செய்யப்பட்டது.
அதனடிப்படையில் நீதிபதிகள் மகாதேவன்,முகமது ஷபிக் அமர்வு முன்பு இன்று வழக்குகள் விசாரணைக்கு வந்தது. அப்போது ஓபிஎஸ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் மணிசங்கர், வழக்கு 20 ம்தேதி ஒத்திவைக்கப்பட்ட நிலையில் வரும் 16ம்தேதி செயற்குழு கூட்டத்தை அறிவித்துள்ளாக குறிப்பிட்டார். கர்நாடகா சட்டமன்ற தேர்தல் குறித்தும், உறுப்பினர் சேர்க்கை சம்பந்தமாகவும் ஏப்ரல் 16ல் செயற்குழு கூட்டம் கூட்டப்பட்டுள்ளதாகவும், கட்சி எம்.பி. எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளவர்களில் இருவர் எம்.எல்.ஏ.க்கள்நீக்கத்தை எதிர்த்து வழக்கு நிலுவையில் உள்ளதால் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
இதற்கு ஈபிஎஸ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜயநாரயண் எதுவும் நடக்காது என்றும் ஆறு மாதங்களில் உறுப்பினர் சேர்க்கை முடிந்து விடாது என்றும் தெரிவித்தார். பொதுச்செயலாளர் தேர்தல் முடிந்து விட்டது, பொதுச்செயலாளருக்கு அதிகாரம் உள்ளது, என்ன முடிவெடுத்தாலும் இந்த வழக்கின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என்றும் உறுதியளித்தார். கர்நாடகா தேர்தல் வேட்புமனு தாக்கலுக்கு ஏப்ரல் 20 கடைசி நாள் என்பதால் தான் செயற்குழு கூட்டப்பட்டது என்றும் விளக்கமளித்தார்.
இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் ,உறுப்பினர் சேர்க்கை நீக்கம் வழக்கின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என்றும், எந்த இடைக்கால கோரிக்கையும் விசாரிக்கப்படாது என்பது நீதிமன்றத்தின் முடிவு என்றும் தெரிவித்தனர். இதையடுத்த வழக்கு விசாரணையை ஏப்ரல் 20 ஆம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.