வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஃபெங்கல் புயலாக மாறுவதற்கான வலுவை இழந்துவிட்டதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வங்க கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது சென்னைக்கு தென்கிழக்கு திசையில் 470 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து தென்கிழக்கு திசையில் 410 கிலோமீட்டர் தொலைவிலும், நாகப்பட்டினத்தில் இருந்து 340 கிலோமீட்டர் கிழக்கு தென்கிழக்கு திசையிலும் மையம் கொண்டுள்ளது.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரத்தில் 10 கிலோ மீட்டர் வேகத்தில் நகரத் தொடங்கியுள்ளது. இது வரும் நவம்பர் 30ஆம் தேதி காலை வடதமிழ்நாடு- புதுச்சேரி கடற்கரையை ஒட்டி காரைக்கால் – மாமல்லபுரம் இடையே காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கரையைக் கடக்கிறது. மேலும், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும் என்றும் வானிலை மையம் கணித்துள்ளது.