Homeசெய்திகள்தமிழ்நாடுபெண்களின் பெயருக்குப் பின்னால் பட்டம் இருப்பது கெளரவம் மட்டுமல்ல-அவர்களின் உரிமை The degree behind...

பெண்களின் பெயருக்குப் பின்னால் பட்டம் இருப்பது கெளரவம் மட்டுமல்ல-அவர்களின் உரிமை The degree behind a Women’s is not a mere honor but a basic right.

-

நான் முதல்வன் திட்டம் மூலம் பல பெண்கள் வேலை வாய்ப்புகளை பெற்றுள்ளதாகவும், மாணவிகள் இத்திட்டத்தை பயன்படுத்திக்கொள்ள வேண்டுமெனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பெண்களின் பெயருக்குப் பின்னால் பட்டம் இருப்பது கெளவரம் மட்டுமல்ல-அவர்களின் உரிமை

சென்னை ராணி மேரி கல்லூரியின் 104வது பட்டமளிப்பு விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவிகளுக்கு பட்டம் வழங்கினார். கடந்த 1914ம் ஆண்டு தொடங்கப்பட்ட இராணி மேரி கல்லூரியில் 104வது பட்டமளிப்பு விழா இன்று நடைப்பெற்றது . இன்றைய பட்டமளிப்பு விழாவில் 2,702 மாணவிகள் இளங்கலை பட்டமும், 473 மாணவிகள் முதுநிலை பட்டமும், 84 மாணவிகள் ஆய்வியல் நிறைஞர் பட்டம்(எம்.பில்) என மொத்தம் 3259 பேர் பட்டம் பெற்றனர். இதில் 5 மாற்றுத்திறனாளி மாணவியர் உட்பட 104 மாணவியர் சிறப்புத்தகுதி பெற்று பதக்கமும் பட்டயமும் பெற்றனர்.

விழாவில் சிறப்புரை ஆற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நீங்கள் பெற்ற அறிவு- உங்களை மேலும் உயர்த்தட்டும். நீங்கள் பெற்ற தன்னம்பிக்கை, உங்களை தலைநிமிர வாழ வைக்கட்டும். கல்லூரியில் இருந்து விடை பெறுகிறீர்களே தவிர – கற்பதில் இருந்து விடை பெறவில்லை. மேலும்,மேலும் படியுங்கள். பாடங்களைப் படிப்பவர்களாக மட்டுமல்ல – பாடங்களை உருவாக்குபவர்களாக உயருங்கள். மற்றவர்களுக்கு வழிகாட்டிகளாக ஆகுங்கள்.

பட்டமளிப்பு விழாவில்

இராணி மேரிக் கல்லூரி என்பது இந்த பெயரைப் போலவே கம்பீரமான பாரம்பரியமான வரலாற்றைக் கொண்ட கல்லூரி. 1915ம் ஆண்டு “கேப்பர் இல்லம்” என்ற பெயரில் இருந்த புகழ்பெற்ற கட்டடத்தில் தான் இராணிமேரி கல்லூரி தொடங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் முதன்முதலாக தொடங்கப்பட்ட மூன்று மகளிர் கல்லூரிகள் இதுவும் ஒன்று. தமிழகத்தைப் பொறுத்தவரை முதல் மகளிர் கல்லூரி என்றால் இராணி மேரிக் கல்லூரி தான்.

104வது பட்டமளிப்பு விழா என்றால் – இந்த நூறு ஆண்டு காலத்தில் எத்தனை லட்சம் மகளிர் படித்து பட்டம் பெற்றிருப்பார்கள். எத்தனை லட்சம் பேருக்கு கல்வியை – அறிவை – ஆற்றலை – வேலை வாய்ப்பை – தன்னம்பிக்கையை – வாழ்க்கையை இந்தக் கல்லூரி உருவாக்கி இருக்கும் என்பதைக் கணக்கிட்டுப் பார்த்தால் மலைப்பாக இருக்கும்.

இராணி மேரிக் கல்லூரியை வெறும் கல்லூரியாக மட்டும் சொல்ல முடியாது பெண்குலத்துக்கு ஒளிவிளக்கு என்று தான் சொல்ல வேண்டும். கல்லூரிக்கு முன்னால் கடற்கரைப் பகுதியில் கலங்கரை விளக்கம் உள்ளது. பெண்கல்வியின் கலங்கரை விளக்காக ராணிமேரிக் கல்லூரி ஒளிவீசிக் கொண்டு இருக்கிறது.

ராணி மேரி கல்லூரியின் 104வது பட்டமளிப்பு விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

இராணிமேரிக் கல்லூரிக்குள் நுழைகிற போது பழைய நினைவுகள் வந்தது. பழம்பெரும் பெருமை கொண்டிருக்கக்கூடிய, பெரிய வரலாற்றைப் பெற்றிருக்கக்கூடிய இந்தக் கல்லூரியை இடிப்பதற்கு முன்னாள் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா முனைந்தார்கள். நான் இந்த நேரத்தில் அரசியல் எல்லாம் பேச விரும்பவில்லை. அது தேவையும் இல்லை.

கல்லூரி இடிக்கக் கூடாது , கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த மாணவிகள், பழைய மாணவிகள், ஆசிரியர்கள், பேராசிரியர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து ஒரு மிகப்பெரிய போராட்டத்தை நடத்திக் கொண்டிருந்தார்கள். அதைத் தொடர்ந்து, உண்ணாவிரதப் போராட்டத்தையும் நடத்தி இருக்கிறார்கள். அப்படிப்பட்ட போராட்டத்தை நடத்திய காரணத்தால் அன்றைக்கு இருந்த அரசு, கல்லூரிக்குள் வரும் குடிநீர் சப்ளையை துண்டித்து நிறுத்தி வைத்தார்கள். கல்லூரியையே மூடிவிட்டு, இங்கு பணியாற்றிய பேராசிரியைகளை வேறு ஊர்களுக்கு இடமாற்றம் செய்தார்கள்.

அன்று இரவு 12மணிக்கு என்னுடைய வீட்டிற்கு போலீஸ் வந்தது. உங்களை கைது செய்ய வந்திருக்கிறோம் என்று சொன்னார்கள். என்ன காரணம் என்று கேட்டேன்? இராணி மேரி கல்லூரியில் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ள மாணவிகளை தூண்டிவிட்டிருக்கிறீர்கள். அதற்காக உங்கள் மீது வழக்குப் போடப்பட்டிருக்கிறது என்று சொல்லி என்னைக் கைது செய்தார்கள். என்னோடு உயர்கல்வித்துறை அமைச்சராக இருக்கக் கூடிய பொன்முடியையும் கைது செய்தார்கள்.

m.kstalin
மு.க.ஸ்டாலின்

கடலூர் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டு ஒரு மாத காலம் நான் சிறையில் இருந்தேன். என்னை அடைத்து வைத்த சிறையின் பெயர் கேப்பர். அது எனக்கு ஒரு பெரிய பெருமை.

ஆகவே, என்னுடைய வாழ்நாளில் எத்தனையோ நிகழ்ச்சிகள், மறக்க முடியாத நிகழ்ச்சிகளாக இருந்தாலும், இந்தக் கல்லூரிக்காக போராடிய மாணவிகளுக்கு நான் ஊக்கப்படுத்துகின்ற நேரத்தில், நான் சிறைபிடிக்கப்பட்டு, கைது செய்யப்பட்டு, சிறையில் இருந்தது என்னுடைய வாழ்நாளில் மறக்க முடியாத, ஒரு சம்பவமாக இன்றைக்கும் இருந்து கொண்டிருக்கிறது.

அப்படிப்பட்ட முக்கியமான இடத்தைப் பிடித்த இடம் தான் இந்த இராணி மேரி கல்லூரி. இத்தகைய புகழ்பெற்ற இந்த இராணிமேரிக் கல்லூரியில் 3.2 கோடி ரூபாய் மதிப்பில் கலைஞர் மாளிகை கட்டப்பட்டது. கடந்த கால ஆட்சியாளர்கள் கலைஞர் என்கின்ற அந்த பெயரை நீக்கி விட்டார்கள். அதனை மீண்டும் இப்போது நாம் சூட்டி இருக்கிறோம்.

கட்டடங்களில் இருக்கும் பெயரை நீக்குகிற காரணத்தால் கலைஞருடைய பெயரை மக்கள் மனதில் இருந்து நீக்கிவிட முடியாது. அவர் கோடிக்கணக்கான மக்களுடைய உள்ளத்தில், உணர்வில் இன்றைக்கும் அவர் வாழ்ந்து கொண்டு இருக்கிறார். அத்தகைய பெருமைக்குரிய கலைஞர் பெயரால் மாளிகை அமைந்திருக்கும் இடம்தான் இராணிமேரிக் கல்லூரி. இன்னார் தான் படிக்கலாம் – இன்னார் படிக்கத் தேவையில்லை – உடல் உழைப்பு வேலைகளை மட்டுமே பார்க்கலாம் என்ற நிலைமை 100 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்தது.

பெண்களின் நிலைமை இதை விட மிக மோசமாக இருந்தது.’அடுப்பூதும் பெண்ணுக்கு படிப்பு எதற்கு?’ என்று கேட்கும் காலமாக அது இருந்தது. சமையல் கரண்டி பிடித்திருக்கும் கையில், புத்தகத்தைக் கொடுங்கள் என்று தந்தை பெரியார் இயக்கம் நடத்தினார்கள். அவரைப் போன்ற சமூகசீர்திருத்தவாதிகளால் தான் நீங்கள் இந்த அரங்கில் நுழைய முடிந்தது.நூற்றாண்டு காலப் போராட்டத்தின் விளைவு. அதனால் தான் முதல் தலைமுறை பட்டதாரிகளாகிய, உங்களுக்கு அடுத்தடுத்து வரும் தலைமுறைகளை படிக்க வைக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

Queen mary's college

உங்களது பெயருக்குப் பின்னால் பட்டம் இருப்பது கெளரவம் மட்டுமல்ல -உங்கள் உரிமை. அத்தகைய உரிமைபெற்றவர்களாக உங்களைக் கருதுகிறேன். திமுக ஆட்சியில் அமைந்த காலத்தில், பெண்கள் முன்னேற்றத்துக்காக ஏராளமான திட்டங்களைத் தீட்டியது. பெண்களுக்கு சொத்தில் சம உரிமைச் சட்டம் கொண்டு வந்தது திமுக அரசு. பணியிடங்களில் பெண்களுக்கு 30 சதவிகித இடஒதுக்கீடு தந்தவர் கலைஞர்.

உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு 33 சதவிகித இடஒதுக்கீடு தந்தவர் கலைஞர். மகளிர் சுய உதவிக்குழுக்களை அமைத்தது தி.மு.க. அரசு. மகளிர் தொழில் முனைவோர் உதவித்திட்டம் கொண்டு வந்தோம். அந்த வரிசையில் தான் மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து பயணத்தை உருவாக்கிக் கொடுத்தோம். இது ஏதோ கட்டணச் சலுகை அல்ல, பெண்களுக்கான பொருளாதார தன்னிறைவுக்கு அடித்தளம் அமைக்கும் திட்டம் இது. இதன் மூலமாக ஏராளமான பெண்கள் கல்வி கற்கவும், வேலைகளுக்காகவும், சிறுதொழில் நிறுவனங்களை உருவாக்கவும் வெளியில் வரத் தொடங்கி இருக்கிறார்கள்.

இந்த கல்லூரியிலேயே தங்கி படிக்க விடுதி கட்டிடம் அமைக்க வேண்டும் என கல்லூரி நிர்வாகம் கோரிக்கை விடுத்தது. கல்லூரி வளாகத்திற்கு உள்ளே விடுதி கட்டிடம் ஒன்று அமைக்கப்படும். நான் முதல்வன் திட்டத்தை மாணவிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இத்திட்டம் மூலம் பல பெண்கள் வேலை வாய்ப்புகள் பெற்றுள்ளார்கள். இராணி மேரி கல்லூரி மாணவிகள் விளையாட்டுத்துறையிலும் சளைத்தவர்கள் அல்ல. பல மாணவிகள் பல விளையாட்டு பிரிவுகளில் தேசிய அளவில் சாதனைகள் புரிந்துள்ளார்கள். இசை துறை மாணவிகள் முன்னணியில் உள்ளார்கள். பேராசிரியைகளும் மாணவிகளுக்கு இணையான சாதனைகளை புரிந்துள்ளர்கள்.

நூற்றாண்டுகளுக்கும் மேலாக கல்வி சேவை ஆற்றி வரும் கல்லூரி பெண் கல்வி முன்னேற்றத்துக்கு தொடர்ந்து செயல்பட வேண்டும். மாணவிகளும் கல்லூரியை போல உயரிய நோக்கத்துடன் இருக்க வேண்டும். இன்றைய பட்டம் முடிவு அல்ல துவக்கமென தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, செய்தி மக்கள் தொடர்புத்துறை அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன், உயர்கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன், நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கப்பாண்டியன், மாநகராட்சி மேயர் பிரியா, கல்லூரி கல்வி இயக்குனர் ஈஸ்வரமூர்த்தி மற்றும் அரசின் முக்கிய அதிகாரிகள், கல்லூரி பேராசிரியர்கள் பங்கேற்றனர்.

MUST READ