Homeசெய்திகள்தமிழ்நாடுஉலகிலேயே ஜாலியான பணி இசை தான் - டிஜே சிவாஜி

உலகிலேயே ஜாலியான பணி இசை தான் – டிஜே சிவாஜி

-

டிஜே எனும் டிஸ்க் ஜாக்கி தான் நவீன இசை யுகத்தின் தாதாக்கள். இவர்களின் பாடல்களின் மிக்ஸிங்குகளுக்காக பல இளசுகள் காத்து கொண்டிருக்கின்றனர்.

உலகிலேயே ஜாலியான பணி இசை தான் - டிஜே சிவாஜி அவற்றை வைத்து ரீல்ஸ் செய்து லைக்குகளை அள்ளுகின்றனர். இசையில் புதுமையான அனுபவத்தை தரும் இந்த டிஜே பணியில் மதுரை மாவட்டத்தை சேர்ந்த டிஜே சிவாஜி கலக்கி வருகிறார். இவர் யாழ்ப்பாண பாடகர்களோடு செய்த மிட்நைட் கான்செர்ட் வைரல் ஆன ஒன்று. இவர் கூறியதாவது…

சொந்த ஊர் மதுரை மாவட்டம் சின்னக்கட்டளை. கலைக்கல்லுாரியில் சேர நினைத்தேன். குடும்ப விருப்பத்தால் கம்யூட்டர் இன்ஜினியரிங் படித்தேன்.கல்லுாரி நாட்களிலே கலை நிகழ்ச்சிகளில் ஆர்வமுண்டு. இசை எடிட் செய்வேன். படிப்பு முடிந்ததும் சென்னை வந்து சாப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரிந்தேன். அங்கு வார இறுதி பார்ட்டியின் போது நான் டிஜே செய்து பாடல் ஒலிபரப்புவேன்.

அப்போதே நிறைய பேர் என்னை டிஜே ஆகலாமே என பாராட்டுவர். பாடல்களை மிக்ஸ் செய்து அடுத்தவர்களுக்கு பிடிக்கும் வகையில் எப்படி கொடுக்கிறோம் என்பது தான் டிஜேவின் சாமர்த்தியம். டிஜே கற்று கொள்ளமுடிவு செய்த பின் பெரிதாக வரவேற்பில்லை. கிராமப்புற பின்புலம் என்பதால்நிராகரிப்பு, புறக்கணிப்புகளை சந்தித்தேன். எனக்கு குரு யாரும் கிடையாது. நானாக மெல்ல பழகி கற்று கொண்டேன். டிஜே என்றாலே ஆங்கில பாடல் என்ற மனநிலை இருந்தது. நான் டிஜே ஆனால் தமிழில் செய்ய ஆசைப்பட்டேன்.

மார்க்கெட்டிங் பணியில் சேர்ந்து ஓய்வு நேரங்களில் டிஜே செய்தேன். அதே நேரம் இன்டர்நெட், இன்ஸ்டகிராம் பயன்பாடும் அதிகரித்தது. அப்போது நான் ‘பிலிவர்’ என்ற ஆங்கிலப்பாடலையும், ‘ஒத்த ரூபா தாரேன்’ தமிழ் பாடலையும் மிக்ஸ் செய்து வெளியிட்டேன். டிக்டாக் இருந்ததால் 3 கோடி பேர் அந்த மிக்ஸைவைத்து வீடியோ உருவாக்கினர். எல்லா பிரபலங்களும் டிக்டாக் செய்தனர். எனக்கு பாராட்டு கிடைத்தது.

வேலையை விட்டு விட்டு முழு நேரம் டிஜே ஆனேன். எனது மிக்ஸ்கள் பல ரீல்ஸ் ஆகி நிறைய பேர் பகிர்ந்ததால் இன்ஸ்டாகிராம் மூலம் எனக்கு என தனி பின்தொடர்பவர்கள் கூட்டம் உருவானது. அப்போது தான் இலங்கையில் கொழும்பு சென்ற போது ‘மிட்நைட் கான்செர்ட்’ என்ற எங்கள் குழு உருவானது. தமிழில் ராப் பாடும் வாஹீசன் ராசையா, நண்பர்கள் தொடர்பு கிடைத்தது. அவர்களுடன் செய்த அனைத்து வீடியோக்களும் தற்போது இணையத்தில் வைரல். கொஞ்சும் தமிழில் பாடிய ராப் பாடல்களுக்கு நான் தான் மிக்ஸ் செய்தேன்.

டிஜே பணியை சரியாக கற்று கொண்டால், இருப்பதிலே ஜாலியான வேலை இது தான். இப்போது இருக்கும் கால சூழலில் வார இறுதியில் எல்லோரும் கொண்டாட்டத்தை தேடி போகிறோம். கொண்டாட்டம் இருக்கிற இடத்தில் இசை இருக்கும். ‘அன்மியூட்டட் மியூசிக் க்ரூ’ என்ற பெயரில் டிஜே கற்று கொடுத்து வருகிறேன். டிஜே தொடர்பாக ஏதேனும் ஐடியா தேவைப்பட்டால் நிச்சயம் இளைஞர்கள் என்னை அணுகலாம் என்றார்.

MUST READ