Homeசெய்திகள்தமிழ்நாடுதந்தையின் அன்பளிப்பு, இடிக்க மனம் இல்லாமல் அப்படியே உயர்த்திய மகன்

தந்தையின் அன்பளிப்பு, இடிக்க மனம் இல்லாமல் அப்படியே உயர்த்திய மகன்

-

- Advertisement -

பரமக்குடியில் விவசாயி ஒருவர் தந்தை அன்பளிப்பாக வழங்கிய வீட்டை இடிக்க மனம் இல்லாமல் ஜாக்கிகளை பயன்படுத்தி நான்கு அடிகள் உயர்த்தி நிறுத்தியுள்ளார்.தந்தையின் அன்பளிப்பு, இடிக்க மனம் இல்லாமல் அப்படியே உயர்த்திய மகன்.ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் பகுதியை சேர்ந்தவர் செய்யது அபுதாஹிர். இவர் பரமக்குடி திருவள்ளுவர் நகரில் குடும்பத்துடன் வசித்து வருவதுடன் விவசாயம் செய்து வருகிறார். இவரது தந்தை சிக்கந்தர் பாட்சா 1984 ஆம் ஆண்டு பசும்பொன்னில் இருந்து பரமக்குடிக்கு தனது குடும்பத்துடன் குடிபெயர்ந்து உள்ளார்.

அப்போது பரமக்குடி திருவள்ளுவர் காலணியில் சொந்தமாக ஆயிரம் சதுர அடியில் வீட்டை கட்டி உள்ளார். தந்தை சிக்கந்தர் பாஷா சமீபத்தில் இந்த வீட்டை தனது மகன் செய்யது அபுதாஹிருக்கு அன்பளிப்பாக வழங்கி உள்ளார். இந்த வீட்டில் செய்யயது அபுதாஹிர் தனது பெற்றோர்கள், மனைவி, குழந்தைகள் என கூட்டு குடும்பமாக வசித்து வருகின்றனர்.

இந்த வீடு கட்டத் தொடங்கிய பிறகுதான் சிக்கந்தர் பாட்ஷா வாரிசுகளுக்கு திருமணம் நடைபெற்றது, பேரக்குழந்தைகள் பிறந்தது இந்த வீட்டில் தான். அதனால், குடும்ப ரீதியாக இந்த வீட்டை அவரது குடும்பத்தினர் செண்டிமெண்ட்டாக கருதி வந்தனர். தற்போது செய்யது அபுதாஹிர் அவரது குடும்பத்தினரும் அந்த வீட்டில் கூட்டுக்குடும்பமாக வசித்து வந்தனர்.

தற்போது இந்த வீடு சாலையை விட்டு 2 அடிக்கு கீழ் பள்ளமானது. மழை பெய்தால் மழைநீர் வீட்டிற்கு புகுந்தது. ஆனால், ராசியான இந்த வீட்டை இடித்துவிட்டு புது வீடு கட்ட செய்யது அப்தாஹீர் குடும்பத்தினருக்கு மனமில்லை. அதேநேரத்தில் சாலையை விட பள்ளமான வீட்டில் வசிப்பதால் வாஸ்து ரீதியாக சரியில்லை என்றும் கவலைப்பட்டனர். வீட்டின் கட்டுமானம் தற்போதைய கான்கீரிட் கட்டடத்திற்கு இணையான உறுதித்தன்மையுடன் இருந்தது. அதனால், வீட்டை இடிக்காமலே ஜாக்கிகளை கொண்டு தூக்கி நிறுத்த முடிவு செய்தனர்.

அதற்கான பொறுப்பு சென்னையை சேர்ந்த பாராமௌண்ட் பில்டிங் லிப்டிங் என்ற தனியார் கட்டுமான நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள், ஹரியானா, உத்தரப்பிரதேசம் மாநிலங்களில் இருந்து இந்த தொழில்நுட்பத்தில் கை தேர்ந்த 15 கட்டுமான தொழிலாளர்களை வரவழைத்தனர். அவர்கள், வீட்டை சுற்றிலும் 100 ஜாக்கி வைத்து வீட்டை 3 அடி உயர்த்தியுள்ளனர். இன்னும் 1 அடி வரை உயர்த்த உள்ளனர். இந்த முறையில் வீட்டின் தரைத்தளம் மட்டும் சேதமடைகிறது. சுவர்களிலும், மேற்கூரை கான்கிரீட் தளத்திலும் சிறு விரிசல் கூட விழவில்லை. வீட்டை இடிக்காமல் அப்படியே ஜாக்கிகளை கொண்டு வடமாநில தொழிலாளர்கள் படிப்படியாக உயர்த்துவதை பொதுமக்கள் தினமும் நின்று வேடிக்கைப்பார்த்து சென்ற வண்ணம் உள்ளனர்.தந்தையின் அன்பளிப்பு, இடிக்க மனம் இல்லாமல் அப்படியே உயர்த்திய மகன்.இதுகுறித்து செய்யது அபுதாஹீர் கூறுகையில். எனது தந்தை 1985 ஆம் ஆண்டு இந்த வீட்டை கட்டினார். வீட்டின் கீழ் தளத்தில் படுக்கை அறை, ஒரு ஹால், வராண்டா, சமையல் அறை உள்ளது.1985 -ல்  வீடு கட்டியபோது எங்க வீடுதான் சாலையை விட மிக உயரமாகவும், பிரம்மாண்டமாகவும் இருந்தது. தற்போது சாலையை விட 2 அடிப்பள்ளத்திற்கு வீடு சென்றுவிட்டது.

அப்பா எங்களுக்காக பார்த்துப் பார்த்து கட்டிய வீடு. தந்தை அன்பளிப்பாக வழங்கிய இந்த வீட்டை இடித்து புதிதாக கட்ட மனமில்லை. அதனால், தரைத்தளத்தை மட்டும் பெயர்த்து உயர்த்த முடிவு செய்து பொறியாளரை சென்றுப் பார்த்தோம். அவர் வீட்டை வந்துப்பார்த்து,வீட்டின் கட்டுமானத்தில் எந்தப் பிரச்சினையும் ஏற்பட வாய்ப்பில்லை.அதனால், வீட்டை ஜாக்கிகளை கொண்டு தூக்கி நிறுத்தலாம் என்ற யோசனையை தெரிவித்தார். அவரது ஏற்பாட்டிலே தற்போது வீட்டை 4 அடி உயரம் வரை உயர்த்தி வருகிறோம். தற்போது மூன்று அடி வரை உயர்த்தப்பட்டுள்ளது.

இன்னும் ஒரு அடி உயர்த்தப்பட வேண்டும்.  வீட்டின் அடித்தளத்தில் உள்ள சுவர்களை மட்டுமே ஜாக்கிகளை கொண்டு தூக்கினர். 45 நாட்களில் பணிகள் முடிக்கப்படவுள்ளது, தற்போது வெளியே இருந்து பார்க்கும்போது வீடு அப்படியே இருப்பது போல் இருக்கும், பணிகள் நிறைவு பெற்ற பின்பு மீண்டும் அதே வீட்டில் தனது தந்தை மற்றும் குடும்பத்தினருடன் வசிக்க இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது என கூறினார்.

நெரிசலான பகுதியிலும், தொடர்ச்சியாக வீடுகள் இருந்தாலும் இந்த தொழில் நுட்பத்தில் எந்த வீட்டையும் மற்ற கட்டடங்களுக்கு தொந்தரவும் இல்லாமல் தனியாக உயர்த்தி தூக்கி நிறுத்தலாம். ஜாக்கிகளை பயன்படுத்தி வீட்டை அப்படியே உயர்த்துவது பரமக்குடியில் இதுவே முதல் முறை. இதனை அப்பகுதி மக்கள் ஆர்வத்துடனும், ஆச்சரியத்துடன் வந்து பார்த்து செல்கின்றனர்.

தந்தை அன்பளிப்பாக வழங்கிய 39 ஆண்டுகள் பழமையான வீட்டை இடிக்க மனம் இல்லாமல் ஜாக்கிகளை பயன்படுத்தி நான்கு அடிகள் உயர்த்தி நிறுத்தியுள்ள செய்யது அபுதாஹீரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நெருங்கும் 2025 ஜல்லிக்கட்டு – வீரத்தை பறைசாற்ற காத்திருக்கும் காளையர்கள்

 

MUST READ