திருவள்ளுவருக்கு மீண்டும் காவி சாயம் பூசும் ஆளுநர்! திருவள்ளுவர்-கபிதாசர்-வேமனா படைப்புகள் குறித்த பன்மொழி பன்னாட்டு கருத்தரங்கு நிகழ்ச்சியில் வைக்கப்பட்டுள்ள பேனரில் வள்ளுவருக்கு காவி உடை அணிவிக்கப்பட்டது.
பாரதம் என்றால் என்னவென்று இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் விளக்காத நிலையில் நமது குழந்தைகளுக்கு பாரத்தை பற்றி விளக்க வேண்டிய கடமை நமக்கு உள்ளதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.
ஒப்பிட்டு நோக்கில் திருவள்ளுவர்-கபிதாசர்-வேமனா படைப்புகள் குறித்த பன்மொழி பன்னாட்டு கருத்தரங்கை தமிழ்நாடு ஆளுநர் ஆ.என்.ரவி தொடங்கிவைத்தார்.
ஆளுநர் வள்ளுவருக்கு காவி சாயம் பூசுகிறார் என ஏற்கனவே திமுக உள்ளிட்ட கட்சிகள் குற்றச்சாட்டு வைத்து வரும் நிலையில், இந்த நிகழ்ச்சியில் வைக்கப்பட்டுள்ள பேனரில் வள்ளுவருக்கு காவி உடை அணிவிக்கப்பட்டு பட்டை போட்டு பொட்டு வைக்கப்பட்டு இருந்தது. மேலும் பெரும்பான்மையான இருக்கைகளும் பன்னாட்டு கருத்தரங்கம் என்ற நிலையிலும் காலியாக இருந்தது.
சென்னை ஆளுநர் மாளிகையில் உள்ள பாரதியார் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வை தொடங்கி வைத்து பேசிய ஆளுநர், இந்த இரண்டு நாட்கள் அறிவு சார் கலந்துரையாடல் கூட்டம் நடைபெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார். நாட்டின் எந்த மாநிலத்தில் பிறந்தாலும், என்ன மொழி பேசி இருந்தாலும் வேற்றுமையில் ஒற்றுமையை இவர்கள் வலியுறுத்துகிறார்கள்.
இந்திய இலக்கியங்களை எந்த மொழியில் படித்தாலும் சில ஒற்றுமைகள் இருக்கும். ஒற்றுமையை மட்டுமே மீண்டும் மீண்டும் வலியுறுத்துவதை பார்க்கலாம். எப்படி ஒற்றுமையோடு வாழ முடியும் என்பது கோடிட்டு காட்ட பட்டிருக்கும் என்றார்.
செப்பு மொழி பதினெட்டு உடையால் என மகாகவி பாரதி நாட்டின் ஒற்றுமையை பாரத மாதா வழியாக வலியுறுத்துகிறார். பாரதம் என்பது என்ன என்பதை குறித்து பேசிய ஆளுநர் பாரத் என்பது இந்தியா என்று அழைப்பதை விட வேறுபட்டது. அது அரசியல் நிலம் மட்டுமல்ல. மக்களால் நிறைந்தது மட்டுமல்ல. ஐரோப்பியர்கள் தான் இந்தியா என அழைத்தனர். பாரத் என்பது பழையது, மிக பெரியது. ஐரோப்பியர்கள் வருகைக்கு முன்பு வேறு விதமாக இருந்தது. பாரத் என்பது ராஷ்ட்ரிய என கூறப்படுகிறது. ரிக் வேதத்தில் பாரத் எப்படி உருவானது என கூறப்பட்டுள்ளது என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.
ஆத்ம ஞானிகள் பலர் இங்கு இருந்தனர். ரிஷிகள் மற்றும் யோகிகள் என அனைவரும் ஒற்றுமையை பற்றி பேசியுள்ளனர். அதில் மனித ஒற்றுமை மட்டும் அடங்கவில்லை. அனைத்து உயிர்களும் ஒற்றுமையாக இருப்பதை வலியுறுத்துகிறார்கள். கிளைகள் பல இருந்தாலும் ஒரு மரத்தில் இருப்பது போல நாம் அனைவரும் பாரதத்தை சேர்ந்தவர்கள். ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள்.
வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன் என வள்ளலார் கூறியது ஒற்றுமையை என்று தெரிவித்த ஆளுநர் பாரதத்தில் மதம் கிடையாது. மதத்தால் உருவானது அல்ல. பாரதம் தர்மத்தால் உருவானது என்றார்.
சமஸ்கிருத கீதை பாடிய ஆளுநர் , தர்மம் என்றால் என்ன என கிருஷ்ணன் பகவத் கீதையில் விளக்கியுள்ளதை குறிப்பிட்டார். ரிஷிகளும், யோகிகளும், வேதங்களும் நமது உருவாக்கத்தில் ஒருவன் தான் காரணம் என கூறியுள்ளது. பாரதம் என்பது இந்தியா கிடையாது. பாரதம் என்பது தார்மீக நாடு.பாரதம் பரந்துபட்டது என்றார்.
காலனிய மனநிலையில் பலரும் இருக்கிறோம். இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் பாரத் என உள்ளது. எந்த மொழி, எந்த சாதி, எந்த இனமமும் பாரத்திற்கு கிடையாது. பாரதம் என்றால் என்னவென்று இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் விளக்கவில்லை. நமது குழந்தைகளுக்கு பாரத்தை பற்றி விளக்க வேண்டிய கடமை நமக்கு உள்ளது என்று ஆளுநர் தெரிவித்தார்.
ரிஷிகள் நடமாடிய பூமி என்பதால் புண்ணிய பூமி. கடைசி 10 வருடத்தில் பாரதம் மீண்டும் கட்டப்பட்டு வருவதாகவும், கோவிட் தடுப்பூசி உருவாக்கி உலகிற்கு வழங்கியது பாரத விஞ்ஞானிகள் என்றார்.
பாரதத்தில் பிரிவினை உருவாக்க, நல்லிணக்கத்தை கெடுக்க, குறுகிய சுய லாபத்திற்காக, ஜாதி மதம், மொழி என பிளவுபடுத்த தற்போது பல கருத்துகள் பரவுகிறது. ஒரு மீனில் உள்ள செதில்கள் ஒன்று போல் மற்றொன்று இல்லை. அதற்காக மீனின் ஒவ்வொரு செதிலையும் பிரித்தால் மீன் இருக்காது. அது போல ஜாதி, மதம், மொழி என இந்த நாட்டை பிரித்தால் இந்த நாடு இருக்காது என்று ஆளுநர் தெரிவித்தார்.
இது நம் நாட்டிற்கு மட்டும் அல்ல அனைவருக்கும் பொருந்தும். நாம் இந்த உலகின் மனிதத்தை காக்கா வேண்டும். அனைத்து உயிர்களையும் பாதுகாக்க வேண்டும் அதுவே நம் கடமை. இந்த பாதையை நாம் இழந்துவிட்டோம் ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் நாம் அதனை மீட்டு வருகிறோம். பாரதம் என்றால் என்ன என்று அறிந்த ஒரு தேசிய தலைமை மூலமாக நாம் இதனை செய்து வருகிறோம்.
10 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இந்தியா இதை செய்ய வேண்டும் அதை செய்ய வேண்டும் என அறிவுறுத்தி வந்தனர். ஆனால் இன்று பாரதம் பேசினால் உலகம் கவனமாக கேட்கிறது. உலகின் எந்த முடிவுகளும் பாரதம் இல்லாமல் எடுக்கப்படுவதில்லை.
கொரோனா மொத்த உலகையும் பாதித்த போது தடுப்பூசி கண்டுபிடித்த நாடுகள் பணம் சம்பாதிக்கும் வழி முறையை பார்த்தது. பாரதம் தடுப்பூசி கண்டுபிடித்த போது 150 நாடுகளுக்கு அதனை பகிர்ந்தளித்தது. இது தான் பாரதம்.ஜாதி, மதம், மொழி என்ற பிரிவினைகளை நாம் கடக்க வேண்டும் என்று ஆளுநர் கூறினார்.
திருவள்ளுவர் மீண்டும் காவி உடையில் என்பதை குறித்து திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.