காந்தி கிராம கிராமிய பல்கலைக் கழக மாணவர்கள் மத்தியில் பாஜகவுக்கு ஆதரவாக பேசி வந்த புகாரில் பேராசிரியர் ரெங்கநாதனை 6 மாதம் விருப்ப ஓய்வில் செல்ல நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி அருகே காந்தி கிராம கிராமிய பல்கலைக்கழகம் உள்ளது. இந்தப் பல்கலைக்கழகத்தில் சுகாதாரத் துறையில் ரெங்கநாதன் என்பவர் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். சுகாதாரம் படிக்கும் (Sanitary) மாணவ, மாணவியர் வாட்ஸ்அப், குழுவில் சமஸ்கிருதம் படிக்கச் சொல்லியும், திராவிடத்தை பற்றி அவதூறு பேசியதாக கூறப்படுகிறது. மேலும் திராவிடம் பற்றி பேஸ்புக், எக்ஸ், வாட்ஸ்ஆப், போன்ற சமூக வலைத்தளங்களிலும், அவதூறு பரப்பியதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக மாணவர்கள் தரப்பில் இருந்து பல்கலைக்கழக துணைவேந்தர் பஞ்சநாதனிடம் செவி வழியாக புகார் அளிக்கப்பட்டது. இது குறித்து காந்திகிராம் நிகழ்நிலைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் தலைமையில் விசாரணை குழுவினர் இன்று பேராசிரியர் ரெங்கநாதனிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில் புகாரில் முகாந்திரம் இருப்பது தெரியவரவே பேராசிரியர் ரெங்கநாதனை 6 மாதங்கள் விருப்ப ஓய்வில் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.