ஆப்ரேஷன் செய்து குழந்தையை கொன்றுவிட்டனர்- தாய் பேட்டி
கை அகற்றப்பட்டு எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த குழந்தை முகமது தஹிர் இன்று காலை உயிரிழந்தது.
கை அகற்றப்பட்ட குழந்தை உயிரிழந்த விவகாரத்தில் எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் குழந்தையின் தாய் அஜிஷா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “என் குழந்தையின் கை அகற்றபட்டதற்கு ஒரு தீர்வு கிடைக்க வேண்டும் என காவல்துறையில் புகார் அளித்திருந்தேன், ஆனால் இதுவரை அதற்கு எந்த தீர்வும் கிடைக்கவில்லை. கடந்த 29 ஆம் தேதி தலையில் உள்ள நீரை மீண்டும் மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர். அதில் பாதிப்பு இருக்கிறது என்று சொன்னார்கள். அங்கு தான் பிரச்சனையே ஆரம்பித்தது.. நியூரோ அறுவை சிகிச்சை நிபுணர் பாலமுருகன் தலையில் நீர் பாதிப்பு இருப்பதால் மீண்டும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என சொன்னார். இதே நிலையுடன் இருந்தால் 100 சதவீதம் உயிருக்கு பாதிப்பு இருக்கும் என மருத்துவர்கள் கூறினர்.
குழந்தைக்கு இயற்கையாக நோய் எதிர்ப்பு சக்தியே இல்லை. செயற்கையாக மருந்துகள் மூலம் அளிக்கப்படும் நோய் எதிர்ப்பு சக்தி மட்டும் தான் இருக்கிறது என மருத்துவர்கள் கூறினர். ஏன் நோய் எதிர்ப்பு சக்தி இல்லை என தான் கேட்டதற்கு நிறைய நரம்புகள் துண்டிப்பு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். நரம்பு துண்டிக்கப்பட்டதற்கு மருத்துவர்கள் அலட்சியத்தால் குழந்தையின் கை அகற்றப்பட்டது தான் காரணம்.
உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாத குழந்தைக்கு அறுவை சிகிச்சை எதற்கு? என நான் கேட்டதற்கு எண்டாஸ்கொப்பி என்று சொல்ல கூடிய தலையில் ஓட்டை போட்டு முதுகு தண்டு வழியாக நீரை வெளியேற்றும் படி, அறுவை சிகிச்சை செய்வோம் என மருத்துவர்கள் கூறினர். இது குழந்தைக்கு பாதிப்பு ஏற்படுத்துமா என கேட்டதற்கு ஏற்படுத்தும் என மருத்துவர்கள் கூறினார்கள். பிறகு ஏன் இந்த சிகிச்சை குழந்தைக்கு செய்கிறீர்கள்? செய்யாதீர்கள் அப்படியே விட்டு விடுங்கள் என தான் மருத்துவர்களிடம் கூறினேன். தப்பு செய்தது மருத்துவர்கள் தான் என அவர்கள் ஒத்து கொள்கின்றனர். குழந்தையின் உடல்நிலை குறித்து தான் கேட்கும் கேள்விக்கு எந்த வித பதிலையும் மருத்துவர்கள் சொல்லவில்லை
குழந்தையின் உயிருக்கு ஆபத்து ஸ்டண்ட் அறுவை சிகிச்சை செய்தே ஆக வேண்டும் என 15 மருத்துவர்கள் கொண்ட குழு தனக்கு அழுத்தம் கொடுத்தனர். அறுவை சிகிச்சை செய்தால் குழந்தை உயிருக்கு ஆபத்து என்று தெரிந்து செய்ய வேண்டும் என அழுத்தம் கொடுத்தனர். குழந்தை இறந்து விடும் என்று தெரிந்து தான் போட்ட வழக்கை முடிப்பதற்காக மருத்தவர்கள் அறுவை சிகிச்சை செய்ய அழுத்தம் கொடுத்தனர். மூன்று நாட்களுக்கு முன் ராஜிவ்காந்தி மருத்துவமனை முதல்வரிடம் பேசினேன். குழந்தையின் அறுவை சிகிச்சை குறித்து கேள்வி கேட்டேன். முறையாக பதில் கூறவில்லை.
ஒரு வாரமாக குழந்தை என்னை மறந்து விட்டது. கழுத்துக்கு மேல் எந்த உறுப்பும் சுய நினைவு இல்லை. என் குழந்தையின் உயிருக்கு ஆபத்து என்பதால் நான் அறுவை சிகிச்சை செய்ய கையெழுத்து போடவே இல்லை..ஒத்துழைக்கவே இல்லை. சம்மந்தப்பட்ட உறுப்பாகிய கை அகற்றப்பட்டுவிட்ட நிலையில், எதற்காக இப்போது உடற்கூறு செய்ய வேண்டும்? உடற்கூறாய்வு செய்து எதை கண்டறியப் போகிறார்கள்? எனவே உடற்கூராய்வு செய்ய வேண்டாம்” என கூறினார்.