உடல்உறுப்பு தானம் செய்த அருட்தந்தை உடலுக்கு அரசு மரியாதை
மூளை சாவடைந்து உடல் உறுப்புக்கள் தானம் செய்த அருட்தந்தை உடலுக்கு அமைச்சர் கே.என்.நேரு உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின் படி, உடல் உறுப்புகள் தானம் செய்பவர்களின் உடல்கள் தமிழ்நாடு முழுவதும் அரசு சார்பில் மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படுகிறது. இந்த நிலையில் திருச்சி பொன்மலைப்பட்டியில் உள்ள அரசு உதவி பெறும் இருதய மேல்நிலைப் பள்ளியின் தாளாளரும், அப்பள்ளியின் தலைமை ஆசிரியருமான அருட்பணியாளர் முனைவர். பிரான்சிஸ் சேவியர் மூளை செயலிழந்து மூளை சாவு அடைந்தார்.
அவருடைய உடல் உறுப்புகள் காவேரி மருத்துவமனைக்கு தானம் செய்யப்பட்டது. பின்னர் அவருடைய உடல் பொதுமக்கள் பார்வைக்காகவும், அஞ்சலி செலுத்துவதற்காகவும் திருச்சி மேலப்புதூர் புனித மரியன்னை பேராலயத்தில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த தகவல் அறிந்த நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு நேரில் சென்று முனைவர் பிரான்சிஸ் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி அவரது குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார். இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார், திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் இனிகோ இருதயராஜ், உள்ளிட்டோர் அவரது உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்கள். இதனைத் தொடர்ந்து இன்று முனைவர். பிரான்சிஸ் சேவியர் உடல் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.