தேர்வுக்கு பயந்து பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மாணவி
சென்னையில் உள்ள தலைமை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு மாலையில் ஒரு கைபேசி எண்ணிலிருந்து வெடிகுண்டு மிரட்டல் வந்தது.
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கழிஞ்சூர் பகுதியில் உள்ள ஜெயின் ஐசிஎஸ்சி தனியார் பள்ளியில் வெடிகுண்டு வைத்துள்ளதாகவும் அது காலை 10:30 மணி அளவில் வெடிக்கும் என மிரட்டல் வந்துள்ளது. உடனே கட்டுப்பாட்டு அறை போலீசார் வெடிகுண்டு மிரட்டல் குறித்து வேலூர் மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக பள்ளிக்குச் சென்ற காவல்துறையினர் மற்றும் வெடிகுண்டு சோதனை நிபுணர்கள் பள்ளியில் சோதனை மேற்கொண்டனர்.
மேலும் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தராஜேஷ் கண்ணன், உத்தரவின் பேரில், துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையில் வேலூர் தெற்கு காவல் ஆய்வாளர் மற்றும் போலீசார் சென்னை கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்ட செல்போன் எண்ணை வைத்து விசாரணை செய்ததில் அந்த எண் தெற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வள்ளலார் தெரு, ஓல்டு டவுனில் காண்பித்தது.
உடனே அங்கு விரைந்து சென்று போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். ஜெயின் தனியார் பள்ளியில் பள்ளியில் 9வது வகுப்பு படிக்கும் மாணவி நாளை நடைபெறவிருக்கும் புவியியல் தேர்விற்கு படிக்காத காரணத்தால் தேர்வு பயத்தில் அவருடைய பாட்டியின் கைப்பேசியை எடுத்து அவரச எண் 100 க்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக தெரியவருகிறது.
பள்ளியில் வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் செயலியக்க செய்யும் (BDDS) குழுவினர் சோதனை மேற்கொண்டதில் வெடிகுண்டு ஏதுமில்லை என தெரியவந்தது. பள்ளி மாணவியே தேர்வு பயத்தின் காரணமாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.