சேலம் மாவட்டம் மேச்சேரி அதிமுக ஜே பேரவை செயலாளர் ராஜா மற்றும் அவரது நண்பர்கள் மற்றும் கிராம மக்கள் சேர்ந்து நிதி நிறுவன ஊழியர்களை உருட்டு கட்டையால் தாக்குதல் நடத்தியதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியது.
மேட்டூர் அருகே மேச்சேரிக்கு உட்பட்ட மூர்த்தி பட்டி கிராமத்தை சேர்ந்த சண்முக மூர்த்தி என்பவர் கோவை தொட்டிபாளையம் பகுதியை இயங்கி வரும் சாமுண்டீஸ்வரி நிதி நிறுவனத்திடம் 3.38 ஏக்கர் நிலத்தின் மீது கடந்த 2023 ஆம் ஆண்டு மே மாதம் 85 லட்சம் ரூபாய் பணம் பெற்றுள்ளார் .இந்த நிலையில் கடந்த ஆண்டு முதல் 19 மாதங்களாக சண்முக மூர்த்தி வட்டி தொகை செலுத்தாமல் காலம் தாழ்த்தி வந்ததால் அதற்கு பதிலாக நிலத்தை நிதி நிறுவனத்திற்கு கிரயம் செய்து கொடுத்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நில உரிமையாளர் தன் வாங்கிய பணத்திற்கு அதிக வட்டி கேட்பதால் என்னால் கட்ட இயலாது அதனால் இரண்டு ரூபாய் வட்டி வீதம் தான் வாங்கிய 85 லட்சம் ரூபாயும் திருப்பி கொடுத்துவிடுவதாகவும் அந்த நிலத்திற்கு கிரயம் ரத்து செய்ய வேண்டும் என்று இரு தரப்பினரும் காவல் நிலையத்தில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
ஆனால் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்த நிலையில் நிதி நிறுவன உரிமையாளர் தனது ஆட்களுடன் சண்முக மூர்த்தி வீட்டிற்கு சென்று அவரது பீரோ டிவி பாத்திரங்கள் உள்ளடவற்றை வெளியே எடுத்து வைத்து வீட்டை கையகப்படுத்த முயற்சி செய்து உள்ளார் . இதுகுறித்து தகவல் அறிந்த சுற்றுவட்டார பகுதியில் உள்ள பொதுமக்கள் ஒன்று கூடியதால் அங்கு மோதல் ஏற்பட்டது.
அப்பொழுது இருதரப்பினர் இடையே மோதல் ஏற்படும் பொழுது மேச்சேரி அதிமுக ஜே பேரவை செயலாளர் ராஜா உருட்டு கட்டையால் நிதி நிறுவன ஊழியர்களை தாக்கியுள்ளார். இதனை சுதாரித்துக் கொண்ட நிதி நிறுவன அதிபர் தான் வந்த சொகுசு காரில் சாலையில் நின்றிருந்த வாகனங்களை இடித்து தள்ளி விட்டு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளார். தகவல் அறிந்து வந்த மேச்சேரி காவல்துறையினர் மூர்த்தி பட்டி கிராம மக்களிடமிருந்து ஆறு நிதி நிறுவன ஊழியர்களையும் மீட்டு காவல் நிலையத்தில் அழைத்து சென்றுள்ளனர்.
நிதி நிறுவனர் சரவணாசுஜை கொடுத்த புகாரில் அதிமுக கிழக்கு ஒன்றிய ஜெபேரவை செயலாளர் ராஜா உட்பட 4 பேர் மீதும் சண்முக மூர்த்தி கொடுத்த புகாரில் நிதி நிறுவன உரிமையாளர் சரவணசுஜய் உட்பட 4 பேர் மீதும் மேச்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இவ்வழக்கில் நில உரிமையாளர் சண்முக மூர்த்தி (47)அவரது ஆதரவாளர் பெரியசாமி (65)ஆகியோரையும், நீதி நிறுவன மேலாளர் ராஜசேகர் (30), ஊழியர்கள் ராம்குமார் (22) , பாரதிராஜா (26)ஆகியோரையும் போலீசார் ஐந்து பிரிவின் கீழ் கைது செய்து காவலில் வைத்துள்ளனா்.
இச்சம்பவம் நடக்கும் சில மணி நேரத்திற்கு முன்பு மேச்சேரி காவல் நிலையத்தில் போலீசார் முன்னிலையில் இருதரப்பினரும் பஞ்சாயத்து பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.
சினிமா காட்சிகளை மிஞ்சுகின்ற அளவிற்கு நடைபெற்ற இந்த சம்பவத்தால் கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து மேச்சேரி காவல்துறையினர் இரு தரப்பினர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர். தற்பொழுது இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது . இச்சம்பவத்தால் மேச்சேரி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கட்டுமான நிறுவனம் தொடங்கி ரூ.300 கோடி மோசடி..! பெண் தொழிலதிபர் கைது!