சேராப்பட்டு பெரி ஆற்றில் செல்லும் தண்ணீரில் அரசு பள்ளிக்கு இடுப்பளவு தண்ணீரில் மாணவ மாணவிகளை தோளில் சுமந்து கொண்டு ஆற்றைக் கடந்து பள்ளிக்கு அழைத்துச் செல்லும் பெற்றோர்கள் ; உயர்மட்ட மேம்பாலம் அமைக்க பலமுறை கோரிக்கை வைத்து நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கல்வராயன்மலை பகுதியில் உள்ள வஞ்சிக்குழி, ஆவலூர், குரும்பலூர் ஆகிய மலை கிராமங்களில் இருந்து சேராப்பட்டு பகுதியில் உள்ள அரசு பள்ளிக்கு தினம் தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் சென்று வருகின்றனர் அப்படி செல்லும்போது சேராப்பட்டு பெரியாற்றில் உயர்மட்ட மேம்பாலம் இல்லாததால் பள்ளி மாணவ மாணவிகள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
பள்ளி மாணவ மாணவிகளின் எதிர்கால படிப்பிற்காக தினம்தோறும் மாணவர்களின் பெற்றோர்கள் அவர்களை தோளில் தூக்கிக்கொண்டு சேராப்பட்டு பெரியாற்றில் இடுப்பளவு தண்ணீரில் கடந்து மாணவ மாணவிகளை பெற்றோர் பள்ளிக்கு அனுப்பி வருகின்றனர்.
ஒரு சில நேரங்களில் மாணவர்களின் பெற்றோர்கள் வேலைக்கு சென்று விட்டால் மாணவர்களே இந்த ஆற்றை கடந்து பள்ளிக்கு செல்ல வேண்டிய சூழலும் இருந்து வருகிறது.
இந்த பெரியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் பள்ளி மாணவர்கள் பள்ளிக்கு செல்ல முடியாத நிலையில் இருந்து வருவதாகவும், அதுமட்டுமின்றி இந்த ஆற்றைக் கடந்து சேராப்பட்டு பகுதிக்கு செல்லும் சாலை கரடுமுரடாக இருப்பதால் பள்ளி மாணவர்கள் அதில் சிரமத்துடன் நடந்து செல்லும் நிலையும் நீடித்து வருவதாகவும், இந்த பகுதியில் உயர்மட்ட மேம்பாலம் அமைத்து பள்ளிக்கு செல்லும் சாலையை புதுப்பித்து தர வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.