Homeசெய்திகள்தமிழ்நாடுவேறு வழியில்ல.. ஆளுநர் பதவியையே ஒழித்திடலாம் - முன்னாள் அட்டர்னி ஜெனரல் சொல்வது என்ன??

வேறு வழியில்ல.. ஆளுநர் பதவியையே ஒழித்திடலாம் – முன்னாள் அட்டர்னி ஜெனரல் சொல்வது என்ன??

-

- Advertisement -

காலம் காலமாக எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில், மத்திய அரசு ஆளுநர்களை நியமித்து குடைச்சல் கொடுத்து வந்தது.  அந்தவகையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி,  தமிழக அரசுக்கு பல்வேறு நெருக்கடிகளை கொடுத்து வந்தார். திருவள்ளுவர் சிலைக்கு காவி உடை அணிவித்தது, மாநில பாடத்திட்டத்தை இழிவாக பேசியது, தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை, மும்மொழிக் கொள்கைக்கு பரப்புரை செய்தது, சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களை கிடப்பில் போடுவது என தன்னால் முடிந்த மட்டும் அரசுக்கு தொந்தரவுகளை கொடுத்து வந்தார்.வேறு வழியில்ல.. ஆளுநர் பதவியையே ஒழித்திடலாம் - முன்னாள் அட்டர்னி ஜெனரல் சொல்வது என்ன??ஆளுநரின் இந்த தொடர்  நடவடிக்கைகளால் உச்சநீதிமன்றத்தை நாடிய தமிழக அரசு, ரிட் மனுவை தாக்கல் செய்தது. அண்மையில் இந்த வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல் சட்டவிரோதமானது என்று தெரிவித்தது. மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க காலக்கெடு நிர்ணயித்ததோடு, ஆளுநரின் பல்வேறு செயலுக்கு கண்டனம் தெரிவித்தது. அத்துடன் தமிழக அரசின் 10 மசோதாக்களுக்கும் அனுமதி வழங்கி வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கியிருந்தது.

இந்நிலையில் உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு தார்மீக பொறுப்பேற்று தமிழ்நாடு ஆளுநர் ரவி பதவி விலக வேண்டும் என்று ஒன்றிய அரசின் முன்னாள் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோகத்கி தெரிவித்துள்ளார். இவர் ஆளுநரை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தமிழ்நாடு அரசின் சார்பில் வாதாடிய மூத்த வழக்கறிஞர் ஆவார். ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள அவர், இது புதிய பாதையை உருவாக்கும் துணிச்சலான, தைரியமான தீர்ப்பு எனவும்,  மிக அரிதாகவே இதுபோன்ற தீர்ப்புகள் வரும் என்றும் தெரிவித்தார்.  ஆளுநர் உள்பட யாராக இருந்தாலும் சரி, அனைவரும் அரசியலமைப்புச் சட்டத்திற்குக் கட்டுப்பட்டவர்கள் என்பதையும், ஆளுநர் மாநில அரசுக்கு தடையாக இல்லாமல், வினையூக்கியாக இருக்க வேண்டும் என்றும்  உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

மேலும், “அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் மக்கள் தான் அனைவருக்கும் மேலானவர்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு மக்களை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு சட்டமியற்றுமானால் ஆளுநருக்கு மூன்று வாய்ப்புகள் உள்ளன.

1.  சட்டத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஏற்றுக்கொண்டால் உடனடியாக சட்டமாகும் அல்லது

2.  அரசின்  மறுபரிசீலனைக்கு அனுப்பலாம்.

மறுபரிசீலனைக்கு அனுப்பிய மசோதாவை அரசு திரும்பவும் ஆளுநருக்கு அனுப்பினால், ஆளுநருக்கு வேறு வழியில்லை. ஏற்றுக்கொண்டு ஒப்புதல் அளிக்கவேண்டும். நிதி மசோதா எனில் ஆளுநர் திருப்பி அனுப்ப இயலாது. மூன்றாவதாக, மாநில அரசின் சட்டத்திற்கும் ஒன்றிய அரசின் சட்டத்திற்கும் மோதல் இருப்பதாக ஆளுநர் கருதினால், குடியரசு தலைவருக்கு அனுப்பலாம். இதைத் தவிர வேறு எதையும் ஆளுநரால் செய்யமுடியாது.

மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்துவது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்று உச்சநீதிமன்றம் கூறிவிட்டது. ஆளுநரின் காலம் தாழ்த்தும் செயலைக் குறிப்பிட்டே இவ்வழக்கில் என் வாதத்தைத் தொடங்கினேன். மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் போதுமான கால அவகாசம் அளித்தபோதும் ஆளுநர் ஒப்புதல் அளிக்க மறுத்துவிட்டார். இந்நிலையில் ஆளுநரின் செயல் தவறானது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. எனவே ஆளுநர் பதவி விலக வேண்டும்.” என்று தெரிவித்தார்.

மேலும், “ஆளுநர் பதவி பதவி விலகுவது அவரது தனிப்பட்ட முடிவு. ஆளுநர் பதவி மீது உயர்மதிப்பு கொண்டிருப்பாரெனில் அவர் பதவி விலகவேண்டும். கேரளாவிலும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. ஆளுநருக்கும் மாநில அரசுக்கும் பிரச்சினைகளை இத்தீர்ப்பு சரி செய்யுமா என்பதை விட.  அரசியலமைப்புச் சட்டம் மிகத் தெளிவாக எடுத்துரைக்கப் பட்டுள்ளது. அரசியலமைப்புச் சட்டத்தின் 141 ஆவது பிரிவின் படி உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு அனைவரும் கட்டுப்பட்டவர்கள்.

உச்சநீதிமன்றத் தீர்ப்பு நாடாளுமன்றச் சட்டத்திற்குச் சமமானது. உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு நாடாளுமன்றமும் கட்டுப்பட வேண்டும். அதேநேரம், உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து விட்டால் எதுவும் மாறாது என்று நினைப்பது தவறு. இன்னொரு காரணத்திற்கும் இத்தீர்ப்பு முன்னுதாரணமானது. மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க கால அவகாசத்தையும் உச்சநீதிமன்றம் தீர்மானித்துள்ளது. சில சந்தர்ப்பங்களில் ஒரு மாதத்தில் ஒப்புதல் அளிக்கவேண்டும்.

சில சந்தர்ப்பங்களில் மூன்று மாதத்தில் ஒப்புதல் அளிக்கவேண்டும். சட்டமன்றத்தை ஆளுநர் முடக்கமுடியாது என்று சொற்களை உச்சநீதிமன்றம் பயன்படுத்தியுள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றம் அரசியலமைப்புச் சட்டப்படி செயல்படுகிறது. சட்டமன்றத்தை ஆளுநர் முடக்க முடியாது” என்று தெரிவித்தார்.

மேலும், இந்த தீர்ப்பினால் ஆளுநர் நியமனம் பாதிக்குமா? ஆளுநர்கள் ஒன்றிய அரசின் பிரதிநிதிகளாக செயல்படுகிறார்களே? என்கிற கேள்விக்கு பதிலளித்த முகுல் ரோகத்கி, “கடந்த 75 ஆண்டுகளாக ஆளுநர்கள் ஒரே மாதிரியாக ஒன்றிய அரசால் நியமிக்கப்பட்டு வருகின்றனர். என்னைப் பொறுத்த வரையில் ஆளுநர் பதவியை ஒழிக்கவேண்டும். ஆளுநர் பதவி என்பது அடையாளப் பதவி மட்டுமே. அடையாளப் பதவிக்கு ஏன் இவ்வளவு பணம் செலவழிக்கவேண்டும்? இன்றைய காலத்தில் ஆளுநர் பதவிக்கு என்ன தேவை உள்ளது? தேர்தல் ‘காலத்தில் பதவிப்பிரமாணம் செய்ய மட்டுமே ஆளுநர் தேவைப்படுகிறார். அதைக்கூட சட்டத்தின் மூலம் மாற்றிவிடலாம். சபாநாயகருக்கு கூடத் தரலாம். வேறு ஒருவருக்கு கூட அந்தப் பொறுப்பைத் தரலாம். பதவிப்பிரமாணம் செய்து வைக்க மட்டுமே தேவைப்படும் ஆளுநர் பதவியை ஒழித்து விடலாம்.

மக்களுக்கு மேல் மன்னர் தேவையில்லை. நீதிபதிகளை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியே நியமிக்கலாம் என்ற வாதம் எழுந்தபோது மக்களுக்கு மத்தியில் மன்னர் தேவையில்லை என்று அம்பேத்கர் சொன்னார். உச்சநீதிமன்ற தலைமைநீதிபதிக்கு அப்பொறுப்பைத் தர மறுத்துவிட்டார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியும் சட்டத்திற்குக் கட்டுப்பட்டவர்தான். உச்சநீதிமன்ற நீதிமன்ற நீதிபதிக்கு இது பொருந்துமெனில் ஆளுநருக்கும் பொருந்தும்” என்று தெரிவித்துள்ளார்.

ஆளுநராக வந்துவிட்டதால் ஆளவந்ததாக அர்த்தம் அல்ல – உச்சநீதிமன்றம்

MUST READ